அதிகவேக அரைசதம் விளாசி ரிஷப் பண்ட் சாதனை – 40 ஆண்டுக்கால கபில்தேவ் சாதனை முறியடிப்பு
பெங்களூரு : இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 300 ரன்களை கடந்து முன்னிலை பெற்ற இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கும், இரவு நேரத்தில் வேகப்பந்துவீச்சுக்கும் சாதகமாக இருந்ததால் முதல் நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுக்க, இலங்கை அணி 109 ரன்களுக்கு சுருண்டது.

கடினமான ஆடுகளம்
பேட்ஸ்மேன்களுக்கு பெங்களூரு ஆடுகளம் கடும் நெருக்கடியை தந்தது. அதிரடி வீரர் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலியே ரன் சேர்க்க திணறி வந்த நிலையில், முதல் இன்னிங்சில் ஸ்ரேயாஸ் ஐயரும், 2வது இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் மட்டும் வேறு ஏதோ பேட்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவது போல் ரன் குவித்தனர்.

ரிஷப் பண்ட் சிக்சர்
ரிஷப் பண்ட் வழக்கம் போல் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி தரும் வகையில் அவரது பேட்டிங் இருந்தது. குறிப்பாக தாம் எதிர்கொண்ட 2வது பந்திலேயே ரிஷப் பண்ட் சிக்சர் விளாசினார். இதன் பின்னர் மைதானத்தின் நான்கு பக்கமும் பவுண்டரிகளை விளாசினார்.

அதிவேக அரைசதம்
இதன் மூலம் ரிஷப் பண்ட் 28 பந்தில் அரைசதம் விளாசினார். இதற்கு முன்னதாக 1982ஆம் ஆண்டு கபில்தேவ் பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்ட் போட்டியில் 30 பந்துகளில் அரைசதம் விளாசியதே இந்திய அளவில் சாதனையாக இருந்தது. ஷர்துல் தாக்கூர் 31 பந்துகளில் அரைசதமும், அதிரடி வீரர் சேவாக் 32 பந்துகளில் அரைசதம் விளாசி இருக்கின்றனர்.

மெக்குல்லம் சாதனை முறியடிப்பு
இதே போன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். இதற்கு முன்பு மெக்குல்லம் 30 பந்துகளில் அரைசதமும், தோனி 32 பந்துகளில் அரைசதம் விளாசியதே முந்தைய சாதனையாக இருந்தது. பேட்டிங்கிற்கு கடினமான ஆடுகளத்தில் ரிஷப் பண்ட் சாதனையை நிகழ்த்தியுள்ளது கவனிக்க தக்கது.


Click it and Unblock the Notifications