பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், தனது அதிரடியான ஆட்டத்தால் மட்டுமல்ல, தனது மனதாலும் ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவரின் கல்லூரிப் படிப்புக்கு நிதியுதவி அளித்து, அவரது எதிர்காலக் கனவுக்கு உயிர் கொடுத்துள்ளார். பண்ட்டின் இந்த மனிதாபிமான செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஜோதி கனபூர் மத். இவர் சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பியூசி (II PUC) தேர்வில் 83% மதிப்பெண்கள் பெற்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். நன்றாகப் படித்திருந்தாலும், அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக கல்லூரிக்குச் சென்று படிப்பைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், தனது எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையில் ஜோதி தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மாணவி ஜோதியின் நிலை குறித்து அறிந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அவருக்கு உதவ முன்வந்துள்ளார். உடனடியாக ஜோதியின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசிய அவர், மாணவியின் கல்லூரிப் படிப்புக்குத் தேவையான முழு நிதியுதவியையும் அளிப்பதாக உறுதியளித்தார்.
ரிஷப் பண்ட்டின் இந்த உதவி சரியான நேரத்தில் கிடைத்ததால், மாணவி ஜோதிக்கு கல்லூரியில் இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. ஒரு இளம் மாணவியின் கல்வி, பணப் பற்றாக்குறை என்ற இருளில் மூழ்கிவிடாமல் தடுத்து, ரிஷப் பண்ட் கை கொடுத்து தூக்கி விட்டுள்ளார்.
ரிஷப் பண்ட்டின் இந்தச் செயல்பாடு குறித்த செய்தி வெளியானதும், கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, பொதுமக்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். "மைதானத்தில் சிக்ஸர் அடிப்பதில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் ஒரு ஹீரோ" என்றும், "இதுதான் உண்மையான நாயகனின் செயல்" என்றும் சமூக வலைதளங்களில் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு விபத்தில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் கிரிக்கெட் களத்தில் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தி வரும் ரிஷப் பண்ட், களத்திற்கு வெளியேயும் இதுபோன்ற சமூக அக்கறையுள்ள செயல்களில் ஈடுபடுவது, அவர் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் காயமடைந்து அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் ஆட முடியாத நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.