பெங்களூரு: தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்துள்ள ரிஷப் பண்ட், சின்னச்சாமி மைதானத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட டெல்லி வீரர்களை சந்தித்து உற்சாகம் கொடுத்துள்ளார்.
16வது ஐபிஎல் சீசனில் நாளை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் 20ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக இரு அணிகளும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக நடக்கும் போட்டிகள் ஒவ்வொன்றும் த்ரில்லராக அமைந்துள்ளது. ஒவ்வொரு அணியும் கடைசி பந்து வரை போராடி ஒரு பந்தில் வெற்றி பெற்று வருகின்றன.

இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் ஒரு அணியை தவிர்த்து அனைத்து அணிகளும் குறைந்தது ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், இதுவரையில் விளையாடிய 4 போட்டியிலும் டெல்லி அணி தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் டெல்லி அணியின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பெங்களூரு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த டெல்லி வீரர்களை ரிஷப் பண்ட் நேரில் சந்தித்து உற்சாகம் கொடுத்துள்ளார். ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற போட்டியை நேரில் காண வந்திருந்தார். இதனால் காயத்தில் இருந்து ரிஷப் பண்ட் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசுகையில், பெங்களூரு என்சிஏ-வுக்கு வந்திருந்தேன். அப்படியே வீரர்களையும் சந்திக்க வந்திருக்கிறேன்.
எப்போதும் வீரர்களை சந்திப்பது உற்சாகம் கொடுக்கும். விபத்தில் அடைந்த காயத்தில் இருந்து நான் எதிர்பார்த்தை விடவும் வேகமாக குணமடைந்து வருகிறேன். சில விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் எங்கிருந்தாலும் டெல்லி அணிக்கு என் ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
திடீரென ரிஷப் பண்ட் பெங்களூரு மைதானம் வந்தது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலில் ஏற்பட்டுள்ள காயம் மட்டும் குணமடையாமல் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து விடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.