ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்ட அவமானம்.. வலுக்கட்டாயமாக கேப்டன் பதவி பிடுங்கப்பட்டது.. LSG சர்ச்சை
லக்னோ: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும், அவர் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த அவமானகரமான சம்பவத்தால் அதிருப்தி அடைந்த பண்ட், லக்னோ அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.
ஐபிஎல் 2026 இறுதிப் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு, கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ரிஷப் பண்ட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக லக்னோ அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தொடரில் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தது. ஆனால், உண்மையில் பண்ட் தானாக முன்வந்து பதவி விலகவில்லை என்றும், அணி நிர்வாகம் தான் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது என்றும் தற்போது தெரியவந்துள்ளது. தன்னை அவமதித்ததாக உணர்ந்த பண்ட், உடனடியாக அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், வரலாற்றிலேயே மிக அதிகபட்ச தொகையான 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை லக்னோ அணி வாங்கியிருந்தது. ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. லக்னோ அணிக்காக விளையாடிய 28 போட்டிகளில் ரிஷப் பண்ட் 135.7 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 581 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங்கில் அவர் மீது வைக்கப்பட்ட தொடர் விமர்சனங்கள் இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
லக்னோ அணியில் இருந்து வெளியேறும் ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மீண்டும் திரும்ப உள்ளார். டெல்லி அணியில் ஏற்கனவே 8 சீசன்களாக விளையாடிய பண்ட், அங்கு மீண்டும் இணைவதற்காக தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவும் சம்மதித்துள்ளார். டெல்லி அணியில் இருந்து நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை லக்னோ அணிக்கு மாற்றுவதன் மூலமாக, ரிஷப் பண்ட்டை டெல்லி அணி மீண்டும் தன்வசப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
