ஐசியு-வில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்.. டிஸ்சார்ஜ் எப்போது?.. வெளியானது புதிய ரிப்போர்ட்!
டேராடூன்: இந்திய கிரிக்கெட் வீரர் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில் அவர் ஐசியுவில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
2022ம் ஆண்டின் கடைசி பகுதி ரிஷப் பண்ட்-க்கு மோசமாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். டிசம்பர் 30ம் தேதியன்று தாயை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து உத்தர்காண்ட் சென்றவர் கார் விபத்தில் சிக்கினார்.
நீண்ட தூரம் தனியாக காரை ஓட்டி வந்த அவர் தூக்க கலக்கத்தில் சாலையின் தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பண்ட்-ன் உடல்நிலை
ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு தலை, கை, கால்களில் பலத்த அடிகள் பட்டு ரத்த காட்சிகளுடன் இருந்ததை பார்த்திருப்போம். அவருக்கு ஆங்காங்கே தசைகள் கிழிந்திருப்பதாகவும், முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்போவதாகவும் மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பண்ட் மாற்றப்பட்டுள்ளார்.

உடல்நிலை அப்டேட்
ரிஷப் பண்ட்-க்கு எக்ஸ்ரே எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்து பார்க்கப்பட்டுவிட்டன. அவருக்கு எந்தவித எலும்பு முறிவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. எனினும் கால்கள் மற்றும் மூட்டுப்பகுதியில் சில ஸ்கேன்கள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. கடும் வலியினால் துடித்ததால் அவற்றினை மட்டும் எடுக்காமல் காத்திருப்பதாக தெரிகிறது.

டிஸ்சார்ஜ் எப்போது
தற்போதைய உடல்நிலையை வைத்து பார்க்கையில் இன்னும் 2 - 3 நாட்களுக்குள் ரிஷப் பண்ட் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிடுவார் என தெரிகிறது. பயணம் செய்யும் அளவிற்கு உடல் தேர்ச்சி பெற்றுவிட்டால் கூட, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜெரி உள்ளிட்ட சிகிச்சைகள் நடைபெறவுள்ளன. பண்ட் உடன் பிசிசிஐ மருத்துவ குழுவும் உள்ளது. டேராடூன் மருத்துவர்களுடன் சேர்ந்து அவர்களும் சிகிச்சைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எப்போது குணமாவார்?
டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியாவுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என தெரிகிறது. முழு உடற்தகுதியை பெறுவதற்கு குறைந்தது 5 -6 மாதங்கள் ஆகும் என்பதால், ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு பண்ட்-ஐ மீண்டும் களத்திற்குள் பார்க்கலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications