2 மேஜர் அறுவை சிகிச்சை.. 9 மாதங்கள் காலி.. ரிஷப் பண்ட் குறித்து வெளியான புதிய தகவல்.. என்ன ஆனது??
மும்பை: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-க்கு 2 பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
உடல்முழுவதும் காயத்துடன் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ரிஷப் பண்ட், சமீபத்தில் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டேராடூனில் தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படுவதால், மும்பையில் உயர்கட்ட பாதுகாப்புடன் சிகிச்சைப்பெற்று வருகிறார். குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அங்கு சென்று பண்ட்-ஐ பார்க்க அனுமதி இல்லை.

அறுவை சிகிச்சை
இந்நிலையில் ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பண்ட்-க்கு கால்களில் 2 பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்படவுள்ளதாகவும், இதற்காக அவர் லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அதில் இருந்து அவர் குணமடைந்து வர சுமார் 9 மாதங்கள் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளனர்.

என்ன பாதிப்பு
ரிஷப் பண்ட்-ன் காலில் மூட்டுப்பகுதியிலும், கணுக்கால் பகுதியிலும் தசைநார்கள் கிழிந்துள்ளன. பொதுவாக தசைநார் கிழிவு ஏற்பட்டால் ஒருவர் அறுவை சிகிச்சைப்பெற்று குணமடைய 6 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இவருக்கு 2 இடங்களில் அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதால் 9 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

மருத்துவர்கள் நிதானம்
எனினும் உடனடியாக அவை செய்யப்படவில்லை. உடலில் உள்ள அனைத்து காயங்களும் நன்கு சரியானவுடன், விமானத்தில் பயணிக்கலாம் என்ற நிலைமை வந்தவுடன் அறுவை சிகிச்சைகள் நடைபெறவுள்ளன. ஒருவேளை பண்ட் விருப்பப்பட்டால் மும்பையிலேயே இதனை செய்யலாம். ஆனால் லண்டனுக்கு செல்ல பிசிசிஐ-தான் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

முக்கிய தொடர்கள்
ரிஷப் பண்ட் உலகக்கோப்பைக்குள் வருவதும் பெரிய சந்தேகம் தான். தற்போதைக்கு நியூசிலாந்து தொடர், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என 5 முக்கிய தொடர்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை, உலகக்கோப்பைகள் உள்ளன.


Click it and Unblock the Notifications