"பாலில் இருந்து ஈயை தூக்கி எறிவது போல், ரிஷப் பண்டை தூக்கிவிட்டார்கள்.." ஆகாஷ் சோப்ரா தாக்கு
மும்பை: ரிஷப் பந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், 2025 ஆசியக் கோப்பைக்கு பந்த் பரிசீலிக்கப்படவில்லை. இருப்பினும், 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியில் சஞ்சு சாம்சனும், ஜிதேஷ் ஷர்மாவும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக மாறிவிட்டனர்.
இதனால், பந்த் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்.பந்தின் டி20 சர்வதேசப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலோ அல்லது நடு வரிசையிலோ விளையாடியபோது அவரது சிறப்பாக விளையாடி இருப்பதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "ரிஷப் பந்த் 1 முதல் 3 வரையிலான இடங்களில் பேட்டிங் செய்யும்போது, 156 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும், 34 என்ற சராசரியிலும் ரன்கள் எடுத்துள்ளார். இது நல்ல புள்ளிவிவரம். ஆனால், நாம் முதல் மூன்று இடங்களைப் பற்றி பேசவில்லை."
"4 முதல் 7 வரையிலான இடங்களில் பேட்டிங் செய்யும்போது, அவரது ஸ்ட்ரைக் ரேட் 140 மற்றும் சராசரி 30 ஆக உள்ளது. இது இன்னும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. அவருக்கு ஆதரவாக இருக்கும் ஒரே விஷயமும் அது தான். ஆனால் இது பற்றி யாரும் பேசாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாம் வென்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மூன்றாவது அதிக ரன் குவித்தவர் பந்த் தான்."
"அவரை ஒரு ஈயை பாலில் இருந்து எடுத்து தூக்கி எறிந்தது போல உள்ளது. யாரும் அவரைப் பற்றி பேசவில்லை. நிச்சயமாக, ஐபிஎல்-இல் அவரது ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அவரைப் பற்றிய உரையாடலில் கூட இடம்பெறாமல் இருப்பது விசித்திரமானது," என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.
ரிஷப் பண்ட் கடைசியாக இங்கிலாந்து தொடரில் காலில் எலும்பு முறிவு காரணமாக ஐந்தாவது டெஸ்டில் இருந்து விலகினார். இந்த பின்னடைவில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை, இதனால் 2025 ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. அக்டோபரில் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் உடற்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications