“அவங்க கேப்டன் பதவி கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்லுங்க”.. ரிஷப் பண்ட்டுக்கு வாசிம் ஜாபர் அறிவுரை
டெல்லி: 2027 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் பதவியை வழங்கினால், அதை ரிஷப் பண்ட் நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் வசீம் ஜாபர் அறிவுறுத்தியுள்ளார். கேப்டன் பதவியை விட தனது பேட்டிங் ஃபார்மில் கவனம் செலுத்தி, இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே ரிஷப் பண்ட்டின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குச் சென்ற ரிஷப் பண்ட், தற்போது மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். ஐபிஎல் டிரேட் மூலம் ₹15 கோடி மதிப்புக்கு ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ₹13.50 கோடிக்கு லக்னோ அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். லக்னோ அணியின் கேப்டனாக இருந்த பண்ட், அந்த இரு சீசன்களிலும் அணியை பிளே-ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்லவில்லை.

இந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசிய வசீம் ஜாபர், "டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் பதவியை வழங்கினாலும், ரிஷப் பண்ட் அதை மறுப்பது தான் நல்லது. கே.எல்.ராகுல் தனது கேப்டன் பதவியை விடுத்து ஒரு சாதாரண வீரராக ஆட்டத்தை ரசித்து விளையாடுவது போல் பண்ட்டும் செய்ய வேண்டும். ஒரு அணியை வழிநடத்தும் போது உரிமையாளர்கள், ரசிகர்கள் என பல தரப்பிலிருந்து அழுத்தம் இருக்கும். மேலும் அவர் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேன் ஆகவும் செயல்பட வேண்டியுள்ளது" என்று கூறினார்.
கடந்த 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு அக்சர் படேல் கேப்டனாக இருந்தார். ஆனால் டெல்லி அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 6 வது இடத்தையே பிடித்தது. அதனால் அந்த அணியில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக சவுரவ் கங்குலி புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். யுவராஜ் சிங்கும் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக வர உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தற்போதைய சூழலில் ஒரு சிறந்த கேப்டன் தேவைப்படுகிறார். இதற்கிடையில், இந்த ஆண்டின் மினி ஏலத்தில் கேப்டனுக்கான சரியான வீரர்களைக் கண்டறிவது டெல்லி அணிக்கு எளிதான காரியமாக இருக்காது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்தபோது பல மேலாண்மை நிர்வாகிகளின் கருத்துக்களைக் கையாள்வதில் பண்ட் சிரமங்களை எதிர்கொண்டார்.
டெல்லி அணியிலும் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ரிஷப் பண்ட் கேப்டனாக இல்லாத போது அவரது சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட் மிகச் சிறப்பாக இருந்துள்ளது. எனவே, ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து, இந்திய டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் திரும்புவதே பண்ட்டின் தற்போதைய நோக்கமாக இருக்க வேண்டும் என்று வாசிம் ஜாபர் வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
