கவுஹாத்தி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்ற நிலையில், அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ரியான் பராக்கிற்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டிக்கான மேட்ச் ரெஃப்ரி அபராதம் விதித்து அறிவித்திருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் தங்களின் ஓவர்களை வீசி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அம்பயர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இதற்கு முன் நடந்த இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்திருந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராகவும் தோல்வி அடைந்திருந்தது ராஜஸ்தான். முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும் ரியான் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் அழுத்தம் அதிகரித்து இருந்தது. மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி தனது கேப்டன்சி திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார் ரியான் பராக்.
இந்த நிலையில் சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தபோது அவர் அபாரமாக விளையாடி 27 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீசியபோது அவரது கேப்டன்சி சிறப்பாகவே இருந்தது.
பவுலர்களை தேர்வு செய்வதிலும், ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவதிலும் சரியாக செயல்பட்டார். மேலும், கடைசி ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் சந்தீப் ஷர்மாவை பந்து வீச அழைத்ததும் சரியான முடிவாக அமைந்தது. முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆனால், இந்த சிறப்பான செயல்பாட்டுக்கு இடையே ரியான் பராக் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார். அதனால் ஓவர்களை வீசி முடிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. தற்போது உள்ள ஐபிஎல் விதிப்படி ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு கேப்டன்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும். முதல் முறை இந்த தவறை செய்ததால் ரியான் பராக்கிற்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தற்போது இம்பேக்ட் பிளேயராக விளையாடுகிறார். அதனால் தான் முதல் மூன்று போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். சஞ்சு சாம்சன் இனிவரும் போட்டிகளில் கேப்டனாக செயல்படுவாரா? அல்லது மேலும் சில போட்டிகளுக்கு இம்பேக்ட் பிளேயராக மட்டும் விளையாடுவாரா? என்ற கேள்வி உள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு முழங்காலில் பிரச்சனை இருப்பதால் அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது. அதற்கு பிசிசிஐ இன்னும் அனுமதி வழங்கவில்லை. எனவே, பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் சஞ்சு சாம்சனை பரிசோதித்து அவர் விக்கெட் கீப்பிங் செய்யலாம் என அனுமதி வழங்கினால் மட்டுமே அவர் கேப்டன் பொறுப்பையும் ஏற்பார்.