போர்ட் ஆப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போல் அதிரடியாக விளையாடியது ரசிகர்களை குதூகலப்படுத்தியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தகுதி பெற வேண்டும் என்றால் டிராவை விட வெற்றியே முக்கியம். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனால் இரண்டாவது டெஸ்ட் சமனில் முடியும் வகையில் ஆடுகளத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தயார் செய்தது. இதில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் இந்தியா 438 ரன்களை குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடி ஆமை வேகத்தில் ரன்களை சேர்த்தது.
229 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. அப்போது முகமது சிராஜ் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ்க்கு 255 ரன்கள் சுருட்டினார். இதன் மூலம் 183 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்றால் இந்திய பவுலர்களுக்கு கூடுதலாக பந்து வீச நேரம் வேண்டும்.

இதனை காரணம் காட்டி இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து அணியின் பேஷ்பாலை தோற்கடிக்கும் அளவுக்கு ஜெய்ஸ்வாலும் ரோகித் சர்மாவும் விளையாடினர். குறிப்பாக ரோகித் சர்மா டி20 யில் விளையாடுவது போல் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்க்கும்போது அது சேவாக்கே களமிறங்கி அடித்தது போல் தெரிந்தது.
ரோகித் சர்மா அதிவேக சதம் அடித்து விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் 57 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஷ்வால் 28 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். இதில் நான்கு பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இந்திய அணி 12 ஓவரிலேயே 98 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டுகளை இழந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டு இருக்கிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இந்திய அணி 281 ரன்கள் கூடுதலாக உள்ளது.