தொடர்ந்து அசத்தும் ஹிட்மேன்... சதம்... அரைசதம்... சூப்பரப்பு!
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. தொடர்ந்து இந்திய அணி ஆடி வருகிறது.
துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 57 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பகலிரவு டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

50 ரன்கள் பார்ட்னர்ஷிப்
இதையடுத்து இந்திய அணி நேற்றைய தினமே தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாட துவங்கியது. சுப்மன் கில், புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி எடுத்துள்ளது. இதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இணைந்து 50 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் எடுத்துள்ளனர்.

களத்தில் ரோகித், ரஹானே
துவக்க வீரர் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 57 ரன்களை எடுத்துள்ளார். அவருடன் ரஹானே களத்தில் உள்ளார். ரோகித் சர்மா கடந்த 2வது போட்டியில் சதமடித்த நிலையில் தற்போது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். 82 பந்துகளில் அவர் இந்த ஸ்கோரை அடித்துள்ளார். இந்த அரைசதத்தின் ஸ்டிரைக் ரேட் 79.4.

சிறப்பான பிட்னஸ்
இதில் 9 பவுண்டரிகள் அடக்கம். குறைந்த ஓவர்களின் நாயகனாக கருதப்படும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதிலும் தான் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். பிட்னஸ் காரணமாக கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 போட்டிகளில் அவர் விளையாடாத நிலையில், தன்னுடைய பிட்னசையும் அவர் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications