மும்பை : 2023 உலகக்கோப்பை தொடர் முடிந்த சில நாட்களில் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் துவங்க உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு லீக் சுற்றில் தான் ஆடிய எட்டு போட்டிகளையும் வென்றுள்ளது. அரை இறுதிப் போட்டிக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது. அதிலும் வென்று, இறுதிப் போட்டியில் உலகக்கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் நடக்க உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரின் போது உலகக்கோப்பை தொடரில் சுமார் 2 மாதம் தொடர்ந்து கிரிக்கெட் ஆடியதால் பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

தற்போது அணியில் இருக்கும் 15 வீரர்களில் 13 பேருக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதில் முக்கியமானவர்கள்.
ஹர்திக் பாண்டியா ஏற்கனவே காயம் காரணமாக ஓய்வில் தான் இருக்கிறார். அவர் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க தொடரின் போது தான் அணியில் இணைவார். தற்போது உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு ஆடத் தயாராக இருப்பார். பிரசித் கிருஷ்ணா சமீபத்தில் தான் அணியில் இணைந்தார் என்பதால் அவரும் டி20 தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது.
உலகக்கோப்பை முடிந்த உடன் ஓய்வு பெறப் போகும் வீரர்களில் பலர் டி20 அணியிலும் இடம் பெற்று இருக்கும் நிலையில், அவர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்ய உள்ளது பிசிசிஐ. ஆனால், அந்த அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்பதில் தான் போட்டி ஏற்பட்டுள்ளது.
டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் நிபுணராக இருக்கும் நிலையில், அவரை கேப்டனாக அறிவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது.