போர்ட் ஆப் ஸ்பெயின் : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு 259 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு எட்டு விக்கெட்டுகளும் தேவைப்பட்டது.
ஆனால் மழை காரணமாக ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டதால் ஆட்டம் சமனில் முடிந்தது. இந்த நிலையில் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து பேசிய போது ரோகித் சர்மா அனைத்து வெற்றிகளும் வித்தியாசமானது தான். வெஸ்ட் இண்டீஸ் அல்லது இந்தியாவிலோ நாங்கள் விளையாடினாலும் சவால்தான். இந்த தொடரில் எங்கள் வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி நாளில் ஆட்டம் நடைபெறாதது ஏமாற்றம்தான். நாங்கள் கடைசி நாளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்துவோம் என்ற நேர்மறையான எண்ணத்துடன் தான் சென்றோம்.நாங்கள் முடிவுக்காக போராடினோம்.
கடைசி நாளில் பேட்டிங் செய்வது எவ்வளவு கடினம் என்று தெரியும். அதனால், முதலில் பெரிய இலக்காக நாங்கள் நிர்ணயித்தோம். ஆனால் இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்காக எதுவுமே இல்லை. ஒரு சில பந்துகள் மட்டும் கணிக்க முடியாத படி செயல்பட்டது. ஆனால் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த நிலையில் சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய கரியரில் அவர் நல்ல முன்னேற்றத்தை கண்டிருக்கிறார்.
பும்ரா,சமி இல்லாத இந்த தருணத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தலைவராக தன்னை நினைத்துக் கொண்டுள்ளார். கிரிக்கெட்டில் எப்போதுமே இரண்டு மூன்று பேர்களை நம்பி ஒட்டுமொத்த அணியும் விளையாட கூடாது. ஆனால் எங்களுடைய அணியில் 11 பேருமே சிறப்பாக செயல்பட்டார்கள். இது நிச்சயம் எங்களுக்கு ஒரு நல்ல விஷயம் தான். இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் வேகமாக ரன் அடிக்க நினைத்தோம். இதனால் தான் இஷான் கிஷனை நாங்கள் நான்காவது வரிசையில் களம் இறக்கினோம்.
கோலியும் மிகப் பிரமாதமாக இந்த போட்டியில் விளையாடினார். எங்கள் அணியின் பேட்டிங்கின் ஆழமும் பந்துவீச்சில் வித்தியாசமும் கலந்து இருக்கிறது. நாங்கள் சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை தவிர நாங்கள் அனைத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாகவே விளையாடினோம். இன்னும் நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்று பிரிவுகளிலும் மேலும் கவனம் செலுத்த விரும்புகிறோம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.