சவுதாம்ப்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் முக்கிய சாதனையை தவறவிட்டிருக்கிறார் ரோகித் சர்மா.
சர்வதேச அளவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரோகித் சர்மா உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டை சதங்கள், 7 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்தவர் என்ற அபார சாதனைகள் அவரிடம் உள்ளன.

இன்னும் சொல்ல போனால், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கோலிக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளார் ரோகித். உலக கோப்பை தொடரிலும் தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சதமடித்து அசத்தினார்.
சிக்சர் மன்னனான ரோகித், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைக்க இருந்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வண்ணம், ஒரு ரன்னில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சி அளிக்க வைத்தார். சிக்சர்களை விளாசுவதில் மன்னனான ரோகித் சர்மா, இது வரை 224 சிக்சர்களை விளாசி தள்ளியிருக்கிறார்.
தல தோனி 225 சிக்சர்களை அடித்திருக்கிறார். இந்த ஆட்டத்தில் 2 சிக்சர்களை விளாசி இருந்தால் தோனியை பின்னுக்கு தள்ளியிருக்கலாம். ஆனால் ஒரே ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்த ரோகித், தோனியின் சிக்சர் சாதனையை முறியடிக்காமல் வெளியேறினார்.
இது தவிர மேலும் ஒரு சாதனையை படைத்திருக்கிறார் ரோகித். இந்த உலக கோப்பையில் ஸ்பின்னரிடம் விக்கெட்டை பறிகொடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.