2வது ஓவரிலேயே முடிவு பண்ணிட்டேன்.. ஆஸ்திரேலியாவுடனான அபார வெற்றி.. கேப்டன் ரோகித் சுவாரஸ்ய கருத்து!
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது குறித்து கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். முதல் 2 ஓவர்களிலேயே முடிவு தெரிந்துவிட்டதாக கூறினார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணிக்கு பேட்டிங் அட்டகாசமாக இருந்தது.

ஸ்கோர் விவரங்கள்
கேப்டன் ரோகித் சர்மாவின் சதம் ( 120 ), ரவீந்திர ஜடேஜா ( 70 ) மற்றும் அக்ஷர் பட்டேல் ( 84) ஆகியோரின் அரைசதங்கள் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. இதனால் இந்தியாவை விட 223 ரன்கள் பின் தங்கிய சூழலில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்த முறையும் படுமோசமாக சொதப்பியது. ஜடேஜா - அஸ்வினின் சுழலில் சிக்கி 91 ரன்களுக்குள் சுருண்டது.

அட்டகாச பார்ட்னர்ஷிப்
இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களும் 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும் எடுத்தார். மற்றொருபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை மட்டுமே எடுத்த சூழலில் 2வது இன்னிங்ஸை தனதாக்கினார். அடுத்தடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி சாதனைப் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ரோகித் சர்மா பேச்சு
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், ஒரு தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பது முக்கியம். அது நடந்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது. கேப்டன்சியை ஏற்றவுடன் துரதிஷ்டவசமாக என்னால் 2 போட்டிகளில் மட்டுமே வழிநடத்த முடிந்தது. இந்த போட்டிக்கு தயாராக தான் இருந்தேன். என்னுடைய திட்டங்கள் சரியாக நடந்துவிட்டது.

நம்பிக்கை இருந்தது
வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய முதல் 2 ஓவர்களிலேயே கிட்டத்தட்ட முடிவு தெரிந்துவிட்டது. இதுபோன்ற ஒரு தொடக்கத்தை பெற்ற பின்னர் எதிரணி வீரர்கள் கடும் அழுத்தத்திற்கு சென்றுவிட்டனர். எங்களின் ஸ்பின்னர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களும் இதுபோன்ற பிட்ச்-ல் அச்சுறுத்தலை கொடுத்தது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது என ரோகித் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications