அடிலெய்டு: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து நான்கு போட்டிகளில் இந்திய அணிக்கு தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். இதன் மூலம் அவரது டெஸ்ட் கேப்டன்சியின் வெற்றி சதவீதம் பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி அனைத்திலும் தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ரோஹித் சர்மா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் கேப்டனாக இணைந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் இந்திய அணிக்கு தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை பெற்றுத் தந்த டெஸ்ட் அணி கேப்டன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா. தோனி, விராட் கோலி ஆகியோரும் தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தோல்வியை பெற்றுத் தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்சூர் அலிகான் பட்டோடி 6 போட்டிகளிலும், சச்சின் டெண்டுல்கர் 5 போட்டிகளிலும் கேப்டனாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். இந்த மோசமான சாதனை ஒரு புறம் இருக்க, ரோஹித் சர்மா தற்போது 22 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு அதில் 8 தோல்விகளை சந்தித்து இருக்கிறார். இது மோசமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
சுனில் கவாஸ்கர் 47 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக செயல்பட்டு அதில் 8 தோல்விகளை சந்தித்து இருக்கிறார். அதனுடன் ஒப்பிடும்போது அதில் பாதி அளவு கூட கேப்டனாக செயல்படாத ரோஹித் சர்மா, அதற்குள் 8 தோல்விகளை சந்தித்து இருக்கிறார். இதன் மூலம் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி வெற்றி சதவீதம் 60 ஆக சரிந்துள்ளது.
அவர் 22 போட்டிகளில் 12 வெற்றிகள், 8 தோல்விகள் மற்றும் 2 டிராவை செய்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக கருதப்படும் விராட் கோலி 68 போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்று, 17 தோல்விகளை சந்தித்து, 11 டிரா செய்து இருக்கிறார் அவரது வெற்றி சதவீதம் 70.17 ஆக உள்ளது.
அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தோனி 60 போட்டிகளில் 27 வெற்றிகள், 18 தோல்விகள் மற்றும் 15 டிராக்களை செய்துள்ளார். அவரது வெற்றி சதவீதம் 60 ஆக உள்ளது. சவுரவ் கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் 21 வெற்றிகள், 13 தோல்விகள் மற்றும் 15 டிராக்களை செய்துள்ளார். அவரது வெற்றி சதவீதம் 61.76 ஆக உள்ளது.
தற்போது ரோஹித் சர்மாவின் வெற்றி சதவீதம் விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலியை விட கீழே சரிந்து தோனிக்கு நிகராக உள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மாவின் வெற்றி சதவீதம் விராட் கோலியை விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தந்த தோல்விகளால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி செயல்பாட்டில் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது.