
அஸ்வின் காயம்
அஸ்வின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாம் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் காயம் அடைந்தார். அப்போது ஒரு ஓவர் மட்டுமே வீசிய அவர், பின் ஓய்வில் இருந்தார். மீண்டும் இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆட வந்தவர், 22 ஓவர்களுக்கு மேல் வீசினார். அவர் காயத்தில் இருந்தார் என்றால், ஏன் அவருக்கு அத்தனை ஓவர்கள் கொடுத்தார்கள்? அப்போதே அவர் சரியாக பந்து வீசவில்லை என்பதும் தெரிந்தது.

நான்காம் போட்டியில் மோசம்
அடுத்த போட்டியில், அஸ்வின் ஆட மாட்டார் என செய்திகள் வந்த நிலையில் திடீரென அணியில் இடம் பிடித்தார். இந்த போட்டியிலும் அஸ்வின் அதிகப் படியான ஓவர்களை வீசினார். காயத்தில் இருந்து குணமாகாத அஸ்வினுக்கு அத்தனை ஓவர்கள் கொடுத்தது சரியா? அந்த போட்டியில் மொயீன் அலி 9 விக்கெட் எடுத்தார், என அஸ்வினுக்கும் அதிக ஓவர்கள் கொடுக்கப்பட்டன. அஸ்வினால் சரியாக பந்து வீச முடியவில்லை. ஆனால், இது பற்றி பேசிய ரவி சாஸ்திரி அஸ்வின் நன்றாகவே இருந்தார் ஆனால், மொயீன் அலி போல வீசி இந்திய அணியை வெற்றி பெற வைக்கவில்லை, என புகார் கூறினார். ஆனால், அவர் சொன்னது பொய் என்பது அடுத்த போட்டியில் டாஸ் போடும் போது கோலி, அஸ்வின் தன் காயத்தை பெரிதாக்கிக் கொண்டார் என கூறியதில் இருந்து தெரிந்தது.

புவனேஸ்வர் காயம்
புவனேஸ்வர் குமார் தென்னாபிரிக்கா தொடரின் போதே முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். பின் அதோடு ஐபிஎல் போட்டிகளில் விட்டுவிட்டு பங்கேற்றார். அதன் பின் அவர் வலி குணமாகாத நிலையில், யோயோ தேர்வில் வெற்றி பெற்றார் எனக் கூறி அவரை இங்கிலாந்து தொடரில் இணைத்தனர். அங்கே வலி சரியாகாத நிலையில், ஒருநாள் போட்டியில் பங்கேற்றார் புவி. அப்போது காயம் பெரிதாகி டெஸ்ட் தொடரில் இருந்தே நீக்கப்பட்டார் அவர். இவருக்கும் காயம் இருப்பது தெரிந்தே அணியில் இடம் அளிக்கப்பட்டு, ஆட வைத்து காயத்தை பெரிதாக்கி உள்ளனர்.

பிசிசிஐ என்ன செய்கிறது?
இவர்கள் இருவர் மட்டுமின்றி சாஹாவும் அறுவைசிகிச்சை முடிந்து இரண்டு மாத ஓய்வில் இருக்கிறார். அவரது தோள்பட்டை காயம் பல மாதங்கள் முன்பே இந்திய அணியின் பிசியோ-வுக்கு தெரிந்துள்ளது. அதன் பின் அவர் ஐபிஎல்-இல் ஆடியுள்ளார். அங்கே அவரது காயம் இன்னும் பெரிதாகி இப்போது அறுவை சிகிச்சை, பல மாத ஓய்வு என மாறியுள்ளது.
இதெல்லாம் பிசிசிஐ-க்கு தெரிந்து தான் நடக்கிறதா? வீரர்கள் உடல்நலனில் பிசிசிஐ என்ன அக்கறை கொண்டுள்ளது? ரவி சாஸ்திரி அவர் இஷ்டத்திற்கு வீரர்களை பயன்படுத்துகிறாரா? காயம் பட்ட ஒருவரை கேப்டன் அதிக ஓவர்கள் வீசச் சொல்வது சரியா? இதற்கெல்லாம் பிசிசிஐ பதில் சொல்லுமா?


Click it and Unblock the Notifications
