"எங்கள் இதயம் நொறுங்கிவிட்டது".. உயிரிழந்த ஆர்சிபி ரசிகர் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம்
பெங்களூர்: 2025 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, தனது வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 ரசிகர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த மோசமான சம்பவத்திற்குப் பிறகு, நீண்ட காலம் மௌனமாக இருந்த ஆர்சிபி அணி தற்போது இதுபற்றி பேசி உள்ளது. மேலும், உருக்கமான சமூக வலைதளப் பதிவுகளின் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன?
2025 ஐபிஎல் தொடரில் 17 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, ஆர்சிபி அணி ஜூன் 3-ம் தேதி தனது முதல் கோப்பையை வென்றது. இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடுவதற்காக, ஜூன் 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடினர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம், ஆர்சிபி-யின் வெற்றி கொண்டாட்டத்தைக் கண்ணீரில் மூழ்கடித்தது. சம்பவம் நடந்த உடனேயே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது.
உணர்ச்சிப்பூர்வமான இரங்கல்
இந்த சம்பவம் நடந்து சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஆர்சிபி அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயம் நொறுங்கிவிட்டது. ஆர்சிபி குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களை நாம் இழந்துவிட்டோம். அவர்கள் நம் குடும்பத்தில் ஒரு பகுதி. அவர்களின் இழப்பு நம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும் எதிரொலிக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"எந்த ஆதரவும் அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப முடியாது. ஆனால், ஒரு முதல்படியாக, ஆழ்ந்த மரியாதையுடன், ஆர்சிபி நிர்வாகம் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாயை வழங்குகிறது. இது நிதியுதவி மட்டுமல்ல, கருணை, ஒற்றுமை மற்றும் தொடர்ச்சியான அக்கறைக்கான ஒரு வாக்குறுதியாகும்" என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
"RCB Cares" (ஆர்சிபி கேர்ஸ்) என்ற புதிய முன்னெடுப்பின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும், உயிரிழந்த ரசிகர்களின் நினைவைப் போற்றும் வகையில் நீண்ட காலத்திற்கு அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபட இருப்பதாகவும் ஆர்சிபி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
தங்களது மௌனம் என்பது துக்கத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ள ஆர்சிபி, இனி ரசிகர்களுடன் இணைந்து செல்ல விரும்புவதாகவும், கர்நாடகாவின் பெருமையாகத் தொடர்ந்து நிலைத்திருப்போம் என்றும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications