அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி 5 ரன் பெனால்டி அபாயத்தில் இருந்தது. எனினும், நூலிழையில் அந்த சிக்கலில் இருந்து தப்பியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
அம்பயர்கள் 5 ரன்கள் பெனால்டி அளிப்பது பற்றி எச்சரித்திருந்தனர். இன்னும் ஒரு முறை தவறு நடந்திருந்தால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டி அளிக்கப்பட்டிருக்கும். இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், அந்த ஐந்து ரன்கள் போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். எதற்காக அம்பயர்கள் எச்சரித்தார்கள், என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

2025 ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. அடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி சேசிங் செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சின்போது கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவர் துவங்குவதற்கு ஒரு நிமிடம் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்படும். அதற்கு மேல் சென்றால் எச்சரிக்கை விடுக்கப்படும். மூன்று முறை ஒரே போட்டியில் அடுத்த ஓவருக்குத் தயாராவதற்கு ஒரு நிமிடத்திற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டால், ஐந்து ரன்கள் பெனால்டி அளிக்கப்படும் என்ற விதி உள்ளது.
இந்த நிலையில், 14வது ஓவரில் அம்பயர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டு முறை அடுத்த ஓவர் வீசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு அதிகமான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டதாக எச்சரிக்கை விடுத்தனர். இன்னும் ஒரு முறை அந்த தவறை செய்தால், ஐந்து ரன்கள் பெனால்டி அளிக்கப்படும் என்ற நிலை இருந்தது.
அப்போது ஆறு ஓவர்கள் மீதமும் இருந்தது. எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் அந்த ஆறு ஓவர்களின் போதும், ஓவரின் முடிவில் இருந்து அடுத்த ஓவரை வீசுவதற்குள் எத்தனை வினாடிகள் ஆகிறது என்பதை கணக்கிட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே அந்த ஆறு ஓவர்களும் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. கடைசி ஓவரின் போது 29 ரன்கள் தேவை என்ற நிலையில், ஷஷாங்க் சிங் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருவேளை மூன்றாவது முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த ஓவர் வீசுவதற்கு ஒரு நிமிட காலத்திற்கும் அதிகமாக எடுத்துக் கொண்டிருந்தால், அம்பயர்கள் 5 ரன்கள் பெனால்டியை அளித்திருப்பார்கள். அதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி கூடுதலாக 5 ரன்கள் பெற்றிருக்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அந்த ஐந்து ரன்கள் என்பது போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அந்த ஐந்து ரன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக அழுத்தத்தை அளித்திருக்கும். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.