என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. தோனின்னா இவ்வளவு தான் தண்டனையா? எகிறிய முன்னாள் கேப்டன்!
ஜெய்ப்பூர் : தோனி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அவருக்கு கொடுத்த தண்டனை மிகக் குறைவு என குமுறி இருக்கிறார் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.
ராஜஸ்தான் போட்டியில் கடைசி ஓவரில் மார்புக்கு மேலே சென்ற ஃபுல்-டாஸ் பந்துக்கு அம்பயர் நோ-பால் கொடுத்துவிட்டு பின்னர் அதை திரும்பப் பெற்றார். அதை கண்டு கோபமடைந்த தோனி, எல்லை மீறி மைதானத்துக்குள் நுழைந்து அம்பயருடன் வாக்குவாதம் செய்தார்.

அபராதம்
இதற்காக தோனிக்கு தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டது. அதே போல, போட்டி முடிந்த பின் தோனி விதிமீறலில் ஈடுபட்டதற்காக போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் சார்பாக கூறப்பட்டது.

தோனிக்கு ஆதரவு
மேலும், இந்த விவகாரத்தில் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள், பத்திரிக்கைகள் கருத்து தெரிவித்து இருந்தன. அம்பயர்கள் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தவறு செய்து வருவதாக கூறி, தோனி செய்தது சரிதான் என கூறினர்.

ஏமாற்றம்
இதைக் கண்ட முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி, தோனி ஆடுகளத்துக்குள் அத்துமீறி நுழைந்து, முதிர்ச்சியற்ற முறையில் நடந்து கொண்டது குறித்த செய்திகள் தனக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறி இருந்தார்.

வெட்கமே இல்லாமல்…
மேலும், வெட்கமே இல்லாமல் தோனிக்கு வெறும் 50% அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? அது சிறு பிள்ளைத்தனமானது என பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார் பிஷன் சிங் பேடி. நட்சத்திர வீரர் என்பதற்காக தோனிக்கு இந்த விஷயத்தில் ஆதரவு கிடைத்துள்ளதை தான் இவர் இப்படி காட்டமாக கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications