
நடையைக் கட்டிய ரஹானே
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே 5 ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். எனினும், அடுத்து ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி அமைத்து நிதானமாக ஆடினர்.

அதிர்ச்சி அளித்த பட்லர்
இந்தக் கூட்டணியால் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் ரன் குவிக்க முடியாமல் போனது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதிரடிக்கு பெயர் போன ஜோஸ் பட்லர் 34 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 6 ரன்களில் வெளியேறினார்.

கடைசி ஓவர்கள் எதிர்பார்ப்பு
கடைசி சில ஓவர்களுக்கு அதிரடி பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித்துடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் கடைசி ஓவர்களை பிளந்து கட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பெரும் ஏமாற்றம்
இவர்கள் கடைசி நான்கு ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் பெரும் ஏமாற்றமாக 14 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 59 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் மட்டுமே இழந்திருந்தாலும், அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹாரி கர்னி அருமை
கொல்கத்தா அணியில் ஹாரி கர்னி அருமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். பியுஷ் சாவ்லா 4 ஓவர்களில் 19 ரன்கள், சுனில் நரைன் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் கொடுத்தனர்.

சுனில் நரைன் அதிரடி ஆட்டம்
140 ரன்கள் என்ற இலக்ககை சேஸ் செய்த கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்கள் சுனில் நரைன், கிறிஸ் லின் அபார துவக்கம் அளித்தனர். சுனில் நரைன் 2வது ஓவரில் வெளுத்துக் கட்டி 22 ரன்கள் எடுத்தார். இதனால், ரன் ரேட் எளிதாக 10-ஐ ஒட்டியே இருந்தது.

கிறிஸ் லின் அரைசதம்
சுனில் நரைன் 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். கிறிஸ் லின் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இறுதியில் ராபின் உத்தப்பா 26, ஷுப்மன் கில் 6 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் நின்று, கொல்கத்தா அணியை 14வது ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.

கொல்கத்தா ஆதிக்கம்
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. விக்கெட்கள் கையில் இருந்தும் அதிரடி ஆட்டம் ஆடாமல், ரன் எடுக்கத் திணறிய ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. கொல்கத்தா அணி தன் ஆதிக்கத்தை இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு முறை நிலை நாட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications