6, 6, 6, 6... கடைசி ஓவரில் சம்பவம் செய்த அப்துல் சமாத்.. சந்தீப் சர்மாவை நம்பி ஏமாந்த ராஜஸ்தான்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்துள்ளது. 19 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே லக்னோ அணி சேர்த்திருந்த நிலையில், சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் 4 சிக்ஸ் உட்பட 27 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தை மாற்றக் கூடிய ஓவராக அது அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் லக்னோ அணி தரப்பில் மிட்சல் மார்ஷ் - மார்க்ரம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரிலேயே மிட்சல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின் மார்க்ரம் - பூரன் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது. பூரன் விக்கெட்டை வீழ்த்த பவர் பிளேவிலேயே ஆர்ச்சருக்கு 3வது ஓவர் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் பூரன் கொடுத்த எளிய கேட்சை சுபம் துபே கோட்டைவிட்டார். ஆனாலும் சந்தீப் சர்மா வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் பூரன் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் பண்ட் 3 ரன்களில் பெவிலியன் சென்றார்.
இதனால் லக்னோ அணியின் நிலைமை 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கவலைக்கிடமாக இருந்தது. அப்போது மார்க்ரம் - ஆயுஷ் பதோனி கூட்டணி இணைந்தது. சில ஓவர்கள் இருவரும் சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணியின் ஸ்கோர் 76 ரன்களாக இருந்தது. இதன்பின் இருவருமே அதிரடிக்கு திரும்பினர்.
சிறப்பாக ஆடிய மார்க்ரம் 31 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுமுனையில் பதோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதனால் 12 ஓவர்களிலேயே லக்னோ அணியின் ஸ்கோர் 105ஆக உயர்ந்தது. இதன்பின் அட்டாக்கில் இறங்கிய மார்க்ரம் 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து வெளியேற, ஆட்டத்தின் கட்டுப்பாட்டை பதோனி எடுத்து கொண்டார்.
சிறப்பாக ஆடிய அவர் 33 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஃபினிஷிங் பொறுப்பு மில்லர் - அப்துல் சமத் கூட்டணி வசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீச சந்தீப் சர்மா அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 1, 6, 6, 2, 6, 6 என்று 27 ரன்கள் விளாசப்பட்டது. இதன் காரணமாக லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்துள்ளது.


Click it and Unblock the Notifications