ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆட்டநாயகன் விருது வென்ற அந்த அணியின் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 82 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன்பின் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் லக்னோ அணியால் எளிதாக வெற்றிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் சந்தீப் சர்மாவின் அபார பவுலிங் காரணமாக ராஜஸ்தான் அணி தரமான வெற்றியை பெற்றது.
கடைசி நேரத்தில் 3 ஓவர்களை வீசிய சந்தீப் சர்மா 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்பின் ஆட்டநாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சஞ்சு சாம்சன் பேசுகையில், கடைசி வரை நின்று பேட்டிங் செய்வது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். அதிலும் வெற்றி பெற்ற ஆட்டத்தில் நம் பங்களிப்பு இருப்பது கூடுதம் சந்தோஷம். இந்த சீசனில் எனக்கு வேறு ரோல் அளிக்கப்பட்டுள்ளது.
காம்பினேஷன் வேறு என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். பயிற்சியாளர் சங்கக்காரா சில ஆலோசனைகள் வழங்கி பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். நான் ஐபிஎல் தொடரை 10 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருகிறேன். அதனால் சில பரிசோதனை முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த சீசனில் கொஞ்சம் கூடுதல் நேரம் பேட்டிங் செய்வதுடன், சூழலை புரிந்து விளையாட முயற்சிக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.
நமது பலம் மற்றும் பலவீனத்தை அறியும் ஒரு பயிற்சி என்றே பார்க்கிறேன். எப்போதும் பந்திற்கு ரியாக்ட் செய்யும் பேட்ஸ்மேனாக விளையாடி வந்துள்ளேன். அது முதல் பந்தாக இருந்தாலும், கடைசி பந்தாக இருந்தாலும் என் அணுகுமுறை அப்படிதான் இருந்துள்ளது. அதேபோல் எனது ஆட்டநாயகன் விருதை சந்தீப் சர்மாவிடம் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் மட்டும் சிறப்பான 3 ஓவர்களை வீசவில்லை என்றால், நான் இங்கு நின்று ஆட்டநாயகன் விருதை வாங்கியிருக்கவே முடியாது.
நான் அவரை இங்கு அழைக்கலாம் என்று நினைத்தேன். அஸ்வின் அண்ணா சொன்னதை போல், வெறும் திறமை மட்டும் அதற்கு போதாது. பிரஷரான நேரங்களில் நமது குணமும் சேர்ந்தே வெளிப்படும். சந்தீப் சர்மாவின் கண்களிலேயே அவரின் குணம் என்ன என்று தெரியும். அவரின் உடல்மொழியை பார்த்தாலே அவர் மீது நம்பிக்கை வரும் என்று தெரிவித்தார்.