முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்திருந்தார். இந்தப் போட்டியின் வெற்றிக்கு அவரும் மிக முக்கியமான காரணமாக இருந்தார். ஆனாலும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை.
கடந்த மூன்று போட்டிகளில் ஜெய்ஸ்வால் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் இருந்தது. மூன்று போட்டிகளில் மொத்தமே 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து இருந்தார். இதை அடுத்து ஜெய்ஸ்வால் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்திருந்தது.

இதனிடையே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனுடன் துவக்க வீரராக இறங்கிய ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடினார். 45 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். மூன்று பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசினார்.
முதல் விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் இணைந்து 89 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்த நிலையில் அதில் அதிகபட்ச ரன்களை ஜெய்ஸ்வால்தான் எடுத்திருந்தார். அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது ஜோப்ரா ஆர்ச்சர் முதல் ஓவரிலேயே பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டம் இழக்கச் செய்தார்.
அதன் பின் பஞ்சாப் அணி தடுமாற்றத்தைச் சந்தித்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தும் ஆட்டநாயகன் விருது வெல்லும் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட்டார் ஜெய்ஸ்வால்.
செய்தி சுருக்கம்:
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார்.
ஜெய்ஸ்வால் 45 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.
முதல் விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் 89 ரன்கள் சேர்த்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 விக்கெட் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருது வென்றார்.