அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பழி தீர்த்து இருக்கிறார் சாஹல்.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கியவர் யுஸ்வேந்திர சாஹல். அந்த அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் 2022 ஐபிஎல் ஏலத்தின் போது அவரை அணியை விட்டு நீக்கி அதிர்ச்சி அளித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அதனால் அப்போது மிகப்பெரும் அதிர்ச்சியில் இருந்தார் சாஹல்.

பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாஹலை ஏலத்தில் வாங்கி இருந்தது. அந்த அணிக்காகவும் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து வந்த சாஹல், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணியை முக்கியமான நாக் அவுட் போட்டியில் பழி வாங்கினார். மேலும் முக்கிய சாதனை ஒன்றையும் செய்தார்.
2024 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி விளையாடியது. அப்போது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் சாஹல் முக்கிய விக்கெட்டான விராட் கோலியை வீழ்த்தினார். எட்டாவது ஓவரில் கோலி 33 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன் பின் பெங்களூரு அணி விக்கெட் வீழ்ச்சியை சந்தித்தது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவரின் 66 வது விக்கெட் ஆகும். அதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்தார் சாஹல்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர் இதுவரை சாஹல்தான். அந்த அணிக்காக அவர் 139 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளரும் சாஹல்தான். அவர் இதுவரை 159 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 205 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.