ஆர்சிபி-யை அவமானப்படுத்திய 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.. சாம்பியன் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம்
கவுகாத்தி: 2026 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் நிலைகுலையச் செய்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தான் விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் எளிதான வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாக இருந்த அந்த அணி, இந்த ஆண்டும் கோப்பையை வென்றுவிடுமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. குறிப்பாக அனுபவ வீரர் விராட் கோலியின் வழிகாட்டுதலும், நட்சத்திர வீரர்களின் பார்மும் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அதை எல்லாம் உடைத்து ஆர்சிபி அணியை போகிற போக்கில் தட்டி விட்டார் வைபவ்.
நேற்று கவுகாத்தியில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. 202 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இவ்வளவு பெரிய இலக்கை துரத்தும் போது ராஜஸ்தான் அணி ஏதேனும் ஒரு இடத்தில் நிச்சயம் சறுக்கலைச் சந்திக்கும் என அனைவரும் கருதினர். ஆனால், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய 15 வயது சிறுவன் சூர்யவன்ஷி, மைதானத்திற்கு வந்த வினாடியே ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி தனது வேட்டையைத் தொடங்கினார் சூர்யவன்ஷி. அதன்பின்பு மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடித்தார். அனுபவமே இல்லாத ஒரு சிறுவன் என்று நினைத்த ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார். வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஒட்டுமொத்தமாக 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்து மிரட்டினார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும்.
300 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடிய விதம், பலம் வாய்ந்த பெங்களூரு பந்துவீச்சை ஒரு கத்துக்குட்டி அணி போல மாற்றியது. ஹேசில்வுட், புவனேஸ்வர் குமார் என அனைவரது பந்துவீச்சையும் வைபவ் சூர்யவன்ஷி துவம்சம் செய்தார். ஒரு சிறுவனிடம் நடப்பு சாம்பியன் அணி நிலைகுலைந்து போனது ஐபிஎல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த சரவெடி ஆட்டத்தாலும், துருவ் ஜுரலின் 81 ரன்கள் ஆட்டத்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. இதே வேகத்தில் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து விளையாடினால், இந்த ஆண்டு ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்வது உறுதி என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications