RR vs SRH: “நான் முழு உடற்தகுதியுடன் இல்லை”.. டாஸ் நிகழ்வில் குண்டைத் தூக்கிப் போட்ட ரியான் பராக்
சண்டிகர்: சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் 2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேற வேண்டும் என்பதால், இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ் வென்ற பிறகு பேசிய ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ், "நாங்கள் முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளோம். இந்த மைதானம் இலக்கை விரட்டுவதற்கு மிகவும் சாதகமானது. சமீபகாலமாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். பந்துவீச்சில் எளிமையான திட்டங்களுடன் களம் இறங்குவோம். அணியில் ஹிஞ்ச் மீண்டும் இணைந்துள்ளார்" என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் கூறுகையில், "நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். நான் விளையாடுவதற்கு முழுமையான உடல் தகுதியுடன் இல்லை. இருப்பினும் எங்களது முழுத்திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி பெற முடியும். ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். துபே இம்பாக்ட் வீரராக களம் இறங்குவார்" எனத் தெரிவித்தார். கேப்டன் பராக் தனது முழு உடல் தகுதியுடன் இல்லை எனக் கூறியது ராஜஸ்தான் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லான்பூர் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் சராசரியாக 201 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு உறுதியாக இருக்கும். மைதானத்தின் ஒரு பக்கம் 69 மீட்டர் எல்லையும், மறுபக்கம் 63 மீட்டர் எல்லையும் இருப்பதால் சிக்ஸர்கள் பறக்க வாய்ப்பு அதிகம். ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பேட் கம்மின்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்ப ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள்.
வெற்றி யாருக்கு?
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 29 அன்று நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிபையரில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும். தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும். இரு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அணி விவரம்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், ஸ்மரன் ரவிச்சந்திரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஷிவாங் குமார், ஈஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன், பிரஃபுல் ஹிங்கே.
இம்பாக்ட் சப்: சலில் அரோரா, அனிகேத் வர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல், டொனோவன் ஃபெரைரா, தசுன் ஷனகா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா, யஷ் ராஜ் புஞ்சா.
இம்பாக்ட் சப்: சுபம் துபே, சுஷாந்த் மிஸ்ரா, அமன் ராவ் பெராலா, ரவி பிஷ்னோய், துஷார் தேஷ்பாண்டே.


Click it and Unblock the Notifications