RR vs SRH: 15 வயசில் அப்படி என்ன கோபம்.. வைபவ் சூர்யவன்ஷியின் ஆவேச ஆட்டம்.. உண்மையில் நடந்தது என்ன?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை ஈவு இரக்கமின்றி விளாசி வெறும் 36 பந்துகளில் சதம் அடித்து மிரட்டியுள்ளார். இதற்கு முன்பு தன்னை சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க செய்த பவுலரை குறிவைத்து அவர் ஆடிய ஆட்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவ்வளவு கோபத்திற்கு என்ன காரணம், அப்படி அந்த ஆட்டத்தில் என்னதான் நடந்தது?
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் இதற்கு முன் மோதிய போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பிரபுல் ஹிங்கே வீசிய அந்த பந்தில் அவர் டக் அவுட் ஆனதால், 217 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் ராஜஸ்தான் அணி இந்த சீசனின் முதல் தோல்வியை தழுவியது. அதன் பிறகும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால் கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்கு பின் வைபவ் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அந்த கோபமும், விரக்தியும் ஜெய்ப்பூரில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக வெடித்து சிதறியது.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரை வீச பிரபுல் ஹிங்கே வந்தார். கடந்த முறை தன்னை வீழ்த்திய அதே பவுலரை பார்த்ததும் பொங்கியெழுந்த வைபவ், வரிசையாக 4 பிரம்மாண்ட சிக்சர்களை பறக்கவிட்டார். முதல் ஓவரிலேயே 24 ரன்களை விளாசி தனது வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார். தொடர்ந்து ஆடிய அவர் 12 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் வெறும் 36 பந்துகளில் தனது 2வது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசிய அவர், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர்களின் பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார்.
சதமடித்த கையோடு சாகிப் உசேன் வீசிய பந்தில் வைபவ் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. பாட் கம்மின்ஸ், ஈஷன் மலிங்கா உள்ளிட்டோர் ரன்களை கட்டுப்படுத்தினர். 9 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்த ராஜஸ்தான் அணி 240 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ஓவர்களில் 228 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஒரு வரலாற்று சதம், பழிவாங்கும் படலம் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தாலும், வைபவ்வின் இந்த வரலாற்று சாதனை ஆட்டம் ஒட்டுமொத்தமாக வீணாகிப் போனது தான் பெரும் சோகம். 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களிலேயே அதை எளிதாக எட்டி அபார வெற்றி பெற்றது. 15 வயது சிறுவனின் சதம் வீணானதால் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.


Click it and Unblock the Notifications