மும்பை: 2011ம் ஆண்டு அக்டோபர் முதல் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியா பங்கேற்கும் டெஸ்ட், ஒருநாள், டுவென்டி 20 போட்டிகளை இன்டர்நெட் மற்றும் மொபைல் போன்களில் ஒளிபரப்பு செய்ய ரூ. 3 கோடி கட்டணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி எப்படி விளையாடுகிறதோ இல்லையோ, வசூலை அள்ளி, கல்லா கட்டுவதில் மட்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் படு கவனமாகவும், க்யூட்டாகவும் செயல்படத் தவறுவதில்லை.
அந்த வகையில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை இன்டர்நெட், மொபைல்களில் காட்டுவதற்கு ரூ. 3 கோடி ரிசர்வ் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது கிரிக்கெட் வாரியம்.
இதுதொடர்பான முடிவு கிரிக்கெட் வாரியத்தின் மார்க்கெட்டிங் கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் ஒரு போட்டிக்கு மட்டுமானது. போட்டித் தொடருக்கானது அல்ல என்று கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.
போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெறுவதற்கான டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பத்தை கிரிக்கெட்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். ரூ. 2 லட்சம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.