ஆர்சிபி அணியிலிருந்து 4 வீரர்கள் வெளியேறினால், அவர்களும் தடுமாறுவார்கள்.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
சென்னை: சிஎஸ்கே அணியின் சமீபத்திய சரிவுகள் குறித்துப் பேசியுள்ள கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது ஏமாற்றம் அளித்தாலும், தங்களுக்கு ஏற்பட்ட காயப் பிரச்சினைகளை விமர்சகர்கள் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆர்சிபி போன்ற வலுவான அணியில் கூட '3-4 முக்கிய வீரர்கள்' காயமடைந்தால் அந்த அணியின் செயல்பாடும் பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தோனியின் வழிகாட்டுதலில் இயங்கும் சிஎஸ்கே அணி, 2025 ஆம் ஆண்டில் அனுபவ வீரர்களை நம்பி களமிறங்கி 10-வது இடத்தையும், 2026 ஆம் ஆண்டில் இளமைக்கு முக்கியத்துவம் கொடுத்து 8-வது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அணியின் மற்றொரு கேப்டன்ஷிப் தேர்வாக சஞ்சு சாம்சனின் வருகை விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், கெய்க்வாட்டின் சொந்த பேட்டிங் ஃபார்மும் சமீபகாலமாக சரிவைச் சந்தித்துள்ளது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இது குறித்து பேசிய கெய்க்வாட் "கடந்த இரண்டு ஆண்டுகள் அனைவரும் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஒரு தொடரின் முடிவைப் பாதிக்கும் சில காரணிகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 2025 தொடரில் நான் கேப்டனாக இருந்து கொண்டே பாதியிலேயே காயத்தால் விலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டிலும் எங்கள் பிளேயிங் லெவனில் இருந்த நான்கைந்து முக்கிய வீரர்கள் கிட்டத்தட்ட பாதி தொடரைத் தவறவிட்டனர்" என்றார்.
கடந்த சில சீசன்களில் சிஎஸ்கே அணி காயங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தோனி ஜேமி ஓவர்டன், நாதன் எல்லிஸ், ஆயுஷ், கலீல் அகமது மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் போன்ற பல வீரர்கள் சில போட்டிகளிலோ அல்லது ஒட்டுமொத்த தொடரிலோ விளையாட முடியாமல் போனது அணிக்குப் பெரிய இழப்பாக அமைந்தது.
ஆர்சிபி அணியை ஒப்பிட்டுப் பேசிய கெய்க்வாட், "வெற்றிகரமான அணிகளாக இருக்கும் ஆர்சிபி போன்ற அணிகளில் இருந்து கூட, மூன்று அல்லது நான்கு முக்கிய வீரர்களை நீங்கள் நீக்கிவிட்டால், அது நிச்சயமாக அணியின் செயல்பாட்டைப் பாதிக்கும். இந்த உண்மைகளை பலர் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இது இறுதி முடிவுகளை மட்டுமே பார்க்கும் ஒரு தொடராக இருப்பதால், கடந்த 15 அல்லது 16 சீசன்களாக சிஎஸ்கே சாதித்துள்ளதை வைத்து, ஒவ்வொரு ஆண்டும் அணி சிறப்பாகவே செயல்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்" என்று விளக்கமளித்தார்.
இறுதியாக, சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பொறுமையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள கெய்க்வாட், "சில நேரங்களில் நாம் நினைத்தபடி விஷயங்கள் நடப்பதில்லை. ஆனால் ரசிகர்கள் விரும்பும் இடத்திற்கு அணியை மீண்டும் கொண்டு சேர்க்க அனைத்து வீரர்களும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். விரைவில் நாங்கள் அந்த இலக்கை அடைவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
