“எனக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க மாட்டீங்களா..” பொங்கி எழுந்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காத நிலையில், இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது பேட் மூலம் இந்திய அணி தேர்வாளர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் புச்சி பாபு அழைப்பு கிரிக்கெட் தொடரில், மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய அவர், இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக அபாரமாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள டிஐ முருகப்பா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மூன்றாவது வீரராகக் களமிறங்கிய ருதுராஜ், நிதானமாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் ஆடினார். வெறும் 122 பந்துகளைச் சந்தித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். முதல் போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக 1 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.

இந்தப் போட்டியில், மற்றொரு இளம் வீரரான அர்ஷின் குல்கர்னியுடன் இணைந்து ருதுராஜ் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 269 பந்துகளில் 220 ரன்கள் குவித்தது. அர்ஷின் குல்கர்னியும் தனது பங்கிற்கு 16 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 146 ரன்கள் குவித்தார். ருதுராஜ் இறுதியில் 10 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
2025 ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத ருதுராஜ், கடைசியாக ஜூலை 13, 2024 அன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியாவிற்காக விளையாடினார். ஆனால் அந்தப் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தேர்வுக்குழுவினரால் புறக்கணிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த சதத்தின் மூலம் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இதே புச்சி பாபு தொடரின் மற்றொரு ஆட்டத்தில், மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்பராஸ் கானும் தனது சிறப்பான ஃபார்மைத் தொடரும் வகையில் ஹரியானா அணிக்கு எதிராக சதம் விளாசினார். இந்தத் தொடரில் இது அவருக்கு இரண்டாவது சதமாகும். இந்திய அணியில் இடம் கிடைக்காத வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருவது தேர்வாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications