Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பர் 4ல் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட்.. 14 ரன்களில் மிஸ்ஸான சதம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடி அசத்தல்

ஸ்ரீநகர்: ரஞ்சி டிராபி தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கி 86 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். நம்பர் 4ல் பேட்டிங் வரிசையில் களமிறங்கிய முக்கிய நேரத்தில் சிறப்பாக ஆடியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் சில வாரங்களில் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் சில போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மாற்றாக இந்திய அணி ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ranji trophy ruturaj gaikwad csk

அதற்கேற்ப நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணைக் கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரோஹித் சர்மாவின் இடத்தில் எந்த வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது தான் கேள்வியாக உள்ளது. இதற்காக இந்திய அணி தரப்பில் அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரையும் தயார் செய்து வருவதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக துலீப் டிராபி, இராணி கோப்பை மற்றும் ரஞ்சி டிராபி என்று ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் இருவரும் தொடர்ச்சியாக விளையாட வைக்கப்பட்டு வருகின்றனர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் பெரியளவில் ஃபார்மில் இல்லையென்றாலும், அபிமன்யூ ஈஸ்வரன் 2 சதங்கள், ஒரு இரட்டை சதம் என்று பொளந்து கட்டி வருகிறார்.

அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியிலும் மோசமாக செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. எந்த பேட்ஸ்மேனுக்கு என்ன மாதிரியான பவுலர்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் ருதுராஜ் கெய்க்வாட் திணறுவதாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் ஜம்மு - காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி வருகிறார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜம்மு - காஷ்மீர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 519 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதன்பின் களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு சித்தேஷ் வீர் - முர்டஷா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முர்டஷா டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து வந்த சச்சின் தாஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மகாராஷ்டிரா அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் சித்தேஷ் வீர் உடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களம் புகுந்தார். இருவரும் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்க்க, மகாராஷ்டிரா அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 74 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் சித்தேஷ் வீர் அரைசதம் கடந்து அசத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், மகாராஷ்டிரா அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுதுவீர் சிங் வீசிய பந்தில் போல்டாகி 130 பந்துகளில் 13 பவுண்டரிகள் உட்பட 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 14 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை ருதுராஜ் கெய்க்வாட் இழந்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்குள் மீண்டும் வர வேண்டுமென்றால் இரட்டை சதம் விளாச வேண்டிய தேவை உள்ளது. அபிமன்யூ ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான் உள்ளிட்ட வீரர்கள் மிகப்பெரிய சதங்களாக விளாசியதன் காரணமாகவே இந்திய அணியில் இடம்பிடித்தனர். ரஞ்சி டிராபியின் முதல் இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக தொடங்கி இருப்பதால், அடுத்தடுத்து கன்சிஸ்டன்சியுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, October 13, 2024, 16:54 [IST]
Other articles published on Oct 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+