ஐபிஎல் ஹீரோ வைபவ் சூர்யவன்ஷியை ஓரம் கட்டிய ருதுராஜ்.. ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வீரர் என நிரூபணம்
தம்புள்ளா: இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. வைபவ் ஆடுகிறார் என்பதாலேயே இந்த இரண்டாம் நிலை கிரிக்கெட் தொடர் நேரலையில் ஒளிபரப்பட்டது. ஆனால், முதல் ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷியை விட அதிக கவனத்தை ஈர்த்தார் சிஎஸ்கே கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்.
சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அடுத்த தலைமுறை வீரராக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி பேசப்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடியதால் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. செவ்வாய்க்கிழமை தம்புள்ளாவில் நடந்த இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் இவர் எப்படி விளையாடுவார் என பலரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், தம்புள்ளா ஆடுகளம் ஐபிஎல் போட்டிகளைப் போல பேட்டிங்கிற்கு எளிதாக இல்லை. பந்து பேட்டிற்கு மெதுவாக வந்ததால் அதிரடியாக ஷாட் அடிப்பது கடினமாக இருந்தது. இதை சரியாக கணிக்காத வைபவ் சூர்யவன்ஷி 12 பந்துகளில் 14 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்தார். பிரியான்ஷ் ஆர்யாவும் விரைவாக வெளியேற, 13 ஓவர்களில் இந்திய 'ஏ' அணி 69 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இந்த இக்கட்டான நிலையில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டார். அதிரடியை தவிர்த்துவிட்டு மிகவும் பொறுமையாக விளையாடினார். திலக் வர்மாவுடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தார். மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டிவிட்டு, மற்ற பந்துகளில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார்.
மிகவும் நிதானமாக ஆடிய அவர் 114 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 88.59 ஆக இருந்தாலும், அணியின் சரிவை தடுத்து நிறுத்தியதில் இந்த சதத்தின் பங்கு மிகப்பெரியது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான இளம் வீரர்கள் எத்தகைய ஆடுகளமாக இருந்தாலும் அதிரடியாக விளையாடவே நினைக்கின்றனர். ஆனால், ஒருநாள் போட்டிகளில் கடினமான சூழ்நிலைகளில் நிலைத்து நின்று ஆடும் திறமை மிகவும் அவசியமானது. அந்த திறமை தன்னிடம் இருப்பதை ருதுராஜ் ஆணித்தரமாக நிரூபித்துள்ளார்.
இலங்கை 'ஏ' அணியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்றாலும், 4 பேட்ஸ்மேன்கள் 45 ரன்களுக்கு மேல் எடுத்து இறுதிவரை கடுமையாக போராடினர். எனினும், ருதுராஜின் பொறுப்பான சதத்தால் இந்திய 'ஏ' அணி த்ரில் வெற்றி பெற்றது.
எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றிய நிலையில், ஐபிஎல் அதிரடி மட்டுமே ஒருநாள் போட்டிக்கு போதாது என்பதை ருதுராஜ் கெய்க்வாட் தனது ஆட்டத்தின் மூலம் உணர்த்தியுள்ளார். பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மைதானத்தில் நேரில் அமர்ந்து இந்த போட்டியை பார்த்தார். எனவே, அகர்கர் முன்னிலையில் அடிக்கப்பட்ட இந்த பொறுப்பான சதம் இந்திய ஒருநாள் அணியில் ருதுராஜுக்கான எதிர்கால வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
