சர்வதேச போட்டியில் சொதப்பிய ருத்துராஜ்.. மீண்டும் சதம் விளாசி அசத்தல்.. 5 இமாலய சிக்சர்கள்
மொஹாலி : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெஸ்ட் மேட்ச் போல் விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட் தற்போது மீண்டும் சதம் விளாசி அசத்தி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த ருத்துராஜ் கெய்க்வாட், நேற்று இரவு போட்டி விரைவில் முடிந்ததால், அன்று இரவே டெல்லியிலிருந்து பஞ்சாப்க்கு புறப்பட்டு சென்றார் .
எந்த இடைவெளியும், ஓய்வும் இல்லாமல் மொஹாலி சென்ற ருத்துராஜ், சர்வீசஸ் அணிக்கு எதிரான சையது முஸ்தாக் அலி தொடரில் விளையாடினார்.

ஒரே இரவில் பயணம்
டாஸ் வென்ற சர்வீஸ் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து மகாராஷ்டிரா அணியின் கேப்டனான ருத்துராஜ் தொடக்க வீரராக கிளம்பினார். ருத்துராஜை தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ரன் சேர்க்கவில்லை. யாஷ் நகர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 19 ரன்களில் வெளியேறினார்.

அதிரடி ஆட்டம்
இதே போன்று நௌசாத் 24 ரன்களிலும், அசீம் காசி 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ருத்துராஜ் கெய்க்வாட் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 2 நாட்களுக்கு முன்பு பேட்டிங்கில் சொதப்பி அணியிலிருந்து நீக்கப்பட்டவரா, தற்போது இப்படி ஆடுகிறார் என்று காண்போரை வியப்பில் ஆழ்த்தியது ருத்துராஜ் இன்னிங்ஸ்.

சதம்
59 பந்துகளில் சதம் விளாசிய ருத்துராஜ், கடைசி வரை 65 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 5 இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இருபது ஓவர் முடிவில் 185 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. ருத்துராஜ் கெய்க்வாட் கடைசியாக விளையாடிய 6 இன்னிங்சில் 108, 94,41,30, 19, 112 ரன்களை அடித்துள்ளார்.

ஏன் மாற்றம்?
இதில் 3 முறை அரைசதங்களை கடந்து 2 சதம் விளாசி இருக்கிறார்.இப்படி உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் அசத்தும் ருத்துராஜ், ஏன் சர்வதேச போட்டியில் சொதப்புகிறார் என தெரியவில்லை. விரைவில் சர்வதேச போட்டியிலும் ருத்துராஜ் ஜொலித்தால் மட்டுமே அவரால் நிலைத்து நிற்க முடியும். இந்த குறையை அவர் எவ்வளவு சீக்கிரம் சரி செய்கிறாரோ, அவ்வளவு நல்லது.


Click it and Unblock the Notifications