“இப்படி பேசுறது நல்லா இல்லை” ருதுராஜ் கெய்க்வாட்டை வெளுத்த சிஎஸ்கே ரசிகர்கள்.. ஹர்திக் போன்ற பேச்சு
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேச்சு அந்த அணியின் ரசிகர்களையே அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் அது குறித்து அவர் பேசியது தான் இதற்கு காரணம்.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான தனது இரண்டாவது லீக் போட்டியில் தோல்வியடைந்தது. அதுவும் 50 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. டி20 போட்டிகளில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவது என்பது நிச்சயம் மோசமான தோல்விதான்.

ஆனால், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் வித்தியாசம் பெரியதாக இல்லை எனவும், வெறும் 50 ரன்களில் தான் தோல்வி அடைந்து இருக்கிறோம் எனவும் பேசினார். அவரது பேச்சு சிஎஸ்கே ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் எடுத்தது.
அடுத்த பேட்டிங் செய்த சிஎஸ்கே 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை பவர் பிளே மற்றும் அதற்குப் பிறகு வந்த சில ஓவர்களில் மிக மோசமாக இருந்தது. அதனால் தான் இந்த மோசமான ஸ்கோர் பதிவானது.
போட்டி முடிந்த பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், 170 ரன்கள் என்ற இலக்கு எட்டக்கூடியது எனவும், கூடுதலாக 20 ரன்கள் இருந்ததால் வெற்றி பெற முடியவில்லை என்றும் சொன்னார். அவர் சொன்னபடியே பார்த்தாலும் சிஎஸ்கே அணி 160 அல்லது 170 ரன்கள் வரை சேர்த்து 20 அல்லது 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்க வேண்டும்.
ஆனால், 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டு இது சாதாரண தோல்வி தான் என்பது போல அவர் பேசியது சிஎஸ்கே ரசிகர்களை விமர்சிக்க வைத்துள்ளது. இதற்கு முன் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக இருந்தபோது ஹர்திக் பாண்டியா இது போன்ற ஒரு அதிர்ச்சி அளிக்கும் பேச்சை பேசியிருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து விட்டு அது குறித்த கேள்விக்கு, "தோல்வியடைவதிலும் தனித்துவமாக இருப்பது சரியான விஷயம் தான்" என சொல்லி இருந்தார். அப்போது பலரும் ஹர்திக் பாண்டியா பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார் என விமர்சித்தனர். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பேச்சை தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார் என பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
செய்தி சுருக்கம்:
- ஆர்சிபிக்கு எதிரான 50 ரன்கள் தோல்விக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் பேசியது ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.
- 170 ரன்கள் இலக்கு எட்டக்கூடியது என்றும், 20 ரன்கள் குறைவாக இருந்ததால் தோல்வி என்றும் அவர் கூறியிருந்தார்.
- 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தும் அவர் அலட்சியமாக பேசியதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
- ஹர்திக் பாண்டியா முன்பு பேசிய சர்ச்சை கருத்துடன் ருதுராஜின் பேச்சு ஒப்பிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications