மும்பை : தென்னாப்பிரிக்காவில் நேற்று தொடங்கிய எஸ்ஏ 20 தொடரில் முதல் லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப் டவுன் அணியும், சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பல பரிட்சை நடத்தின. ஐபிஎல் பாணியில் இந்த தொடர் நடைபெறுவதால் இந்திய ரசிகர்கள் இந்த போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கண்டுகளித்தனர்.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணி இரண்டு முறை சாம்பியன் ஆக இந்த தொடரில் களம் இறங்கியுள்ளது. மும்பை அணி வீரர்கள் தொடக்கத்தில் தடுமாறினாலும், அந்த அணியின் குட்டி டிவில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் டிவால்ட் பிரவீஸ் 29 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.

இதில் ஆறு சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் டிலானோ என்ற பவுலர் 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் எம் ஐ கேப்டவுன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதை எடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாக் கிராலி 12 ரன்களிலும், மார்க்கரம் 4 ரன்களிலும் வெளியேறினர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 16 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதை அடுத்து கேப்டன் மார்கரம் நிதானமாக விளையாடி 19 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவரும் அதற்கு மேல் நிலைத்து நிற்கவில்லை.
அதிரடி வீரர் டிரிஸ்டன்ஸ் ஸ்டெப்ஸ் 13 ரன்களில் வெளியேற சன்ரைசர்ஸ் அணி 50 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட் இழந்தது. இறுதியில் மார்க்கரம் 14 ரன்கள் எடுத்த போது ரசித் கானால் ரன் அவுட் செய்யப்பட்டார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் 15 வது ஓவரிலே சன்ரைசர்ஸ் அணி 77 ரன்களில் சுருண்டது.
இதில் எம்ஐ அணியின் நட்சத்திர வீரர் டிரண்ட் பவுல்ட் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் டிலானோ ஈர்த்தார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய அவர் பந்துவீச்சில் மூன்று ஓவர்கள் வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் எம் ஐ கேப்டவுன் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ரன் ரேட்டிலும் 4.85 என்ற அளவில் எகிறி இருக்கிறது. அபாரமாக பேட்டிங் பந்துவீச்சில் ஈடுபட்ட டிலானோ எந்த ஒரு ஐபில் அணியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.