தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட தென் ஆப்பிரிக்கா...!
ஆக்லாந்து: பீல்டிங்குக்குப் பெயர் போனது தென் ஆப்பிரிக்கா. ஆனால் இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் படு பரபரப்பாக செயல்பட்ட அவர்கள் பீல்டிங்கில் பெரிய அளவில் சொதப்பி, தங்களது தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர்.

நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடியது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தங்களது மோசமான பீல்டிங்கால், நியூசிலாந்தை சிறப்பாக ஆட தென் ஆப்பிரிக்கர்கள் அனுமதித்து விட்டனர் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
பல கேட்ச்களை தென் ஆப்பிரிக்கா இன்று மிஸ் செய்தது. அருமையான ரன் அவுட்கள் மிஸ் ஆகின.
- ஸ்டெயின் வீசிய 3வது ஓவரில் ஒரு ரன் அவுட் மிஸ் ஆனது.
- இந்த ஓவரின் 2-வது பந்தை கப்தில் கவர் திசையில் அடித்து ஒரு ரன் எடுக்க முயன்றார். ஆனால் எதிர்முனையில் இருந்த மெக்கல்லம் ஓடிவரவில்லை. பாதி மைதானத்தில் நின்ற கப்திலை டுமினி ரன் அவுட் செய்ய தவறினார்.
- ஸ்டெயின் வீசிய 32-வது ஓவரின் 3-வது பந்தை எல்லியாட் பாயிண்ட் திசையில் அடித்தார். அப்போது எதிர்முனையில் இருந்த கோரி ஆண்டர்சன் ரன் எடுப்பதற்காக ஓடினார். ஆனால் எல்லியாட் வர வேண்டாம் என்றார்.
- இதையடுத்து ஆண்டர்சன் திரும்பி ஓடி வந்தார். அதற்குள் பந்து டி வில்லியர்ஸ் கைக்கு வந்தது. பந்தை பிடிப்பதற்கு முன் கையால் ஸ்டம்பை தட்டினார் டி வில்லியர்ஸ். அப்போது பெய்ல்ஸ் கீழே விழுந்தது. வெறும் கையால் ஸ்டம்பைக் கலைத்ததால் இந்த ரன் அவுட் வாய்ப்பும் செல்லாமல் போனது.
- 41-வது ஓவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை எல்லியாட் அடித்து விட்டு 2 ரன்னுக்கு ஓடினார். அப்போது ரூஸோவிடம் இருந்து வந்த பந்தை விக்கெட் கீப்பர் குவின்டான் டி காக் பிடித்து ஸ்டம்பை தாக்க தவறினார். இதனால் எல்லியாட் 64 ரன்னில் அவுட்டாகும் கண்டத்தில் இருந்து தப்பினார்.
- இதேபோல் 42-வது ஓவரை மார்னி மோர்கல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை எல்லியாட் தூக்கி அடித்தார். 3 பீல்டர்கள் ஓடினார்கள். ஆனால் பந்து அவர்களுக்கு மத்தியில் விழுந்தது.
- இதே ஓவரின் கடைசி பந்தையும் எல்லியாட் தூக்கி அடித்தார். பந்து மிட்விக்கெட் திசையில் உயரமாக சென்றது. பந்து பஹார்தியான் கையில் விழும் வேளையில் டுமினி குறுக்கே வந்து கெடுத்து விட்டார்.
- கடைசி ஒவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை வெட்டோரி சந்தித்தார். பந்தை வெட்டோரியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால், பந்து விக்கெட் கீப்பரான டி காக் கைக்கு சென்றது.
- அந்த வேளையில் எல்லியாட் எதிர்திசையில் இருந்து ஓடி வந்தார். அப்போது, டி காக் நேராக வீசி எல்லியாட்டை ரன் அவுட் செய்ய தவறினார். இதனால் அடுத்த பந்தை சிக்சருக்கு விரட்டிய எல்லியாட், நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார். என்ன கொடுமை என்றால் ஸ்டெயின் பந்து வீச்சின்போதுதான் பல சொதப்பல்கள் அரங்கேறின என்பது.
Story first published: Tuesday, March 24, 2015, 18:49 [IST]
Other articles published on Mar 24, 2015


Click it and Unblock the Notifications