ஜோஹன்னஸ்பெர்க்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல தீவிரமான ரசிகர்கள் வேறு எந்த அணிக்கும் இல்லை. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் போட்டிகளை பார்க்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் விரும்பினால் அதற்கு ஒரு வழி உள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டில் நடைபெற உள்ள டி20 தொடரான எஸ்ஏ டி20 (SA T20) தொடர் ஜனவரி 9 முதல் துவங்க உள்ளது.
அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை அணியான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் என்ற அணி பங்கேற்க உள்ளது. கடந்த காலங்களிலும், தற்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த, இருக்கும் வீரர்கள் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம் பெற்று விளையாட உள்ளனர்.

எனவே. இது பாதி சிஎஸ்கே அணியாகவே காட்சி அளிக்கிறது. அந்த வகையில் இந்த போட்டியை சிஎஸ்கே ரசிகர்கள் அதிக அளவில் விரும்ப வாய்ப்பு உள்ளது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளஸிஸ் ஆவார். அவர் 2018 முதல் 2021 வரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று ஆடினார்.
அப்போது சிஎஸ்கே ரசிகர்களின் பேராதரவை பெற்றார் டூ பிளஸிஸ். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் மொயின் அலி, டெவான் கான்வே, மதிஷா பதிரானா, இம்ரான் தாஹிர், மகீஷ் தீக்சனா ஆகியோரும் பங்கேற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் சிஎஸ்கே அணியில் ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் டெவான் கான்வே மற்றும் மதிஷா பதிரானா ஆகிய இருவரும் 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சிஎஸ்கே அணியிலும் இடம் பெற்று உள்ளனர். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு நட்சத்திர வீரராக இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ இடம் பெற்று இருக்கிறார்.
அந்த வகையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வலுவான அணிகளில் ஒன்றாக உள்ளது. 40 வயது ஆன நிலையிலும் இன்னும் தனது சிறந்த பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார் ஃபாப் டூ பிளஸிஸ். அவர் துவக்க வீரராக கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். எனவே, இந்த சீசனிலும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும், 2025 எஸ்ஏ டி20 தொடரில் முதன்முறையாக இந்திய வீரர் ஒருவர் பங்கேற்க இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் இந்த முறை எஸ்ஏ டி20 தொடரில் பங்கேற்க உள்ளார். அவர் பார்ல் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார்.
எனவே, எஸ்ஏ டி20 தொடரையும் அதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் போட்டிகளையும் சிஎஸ்கே ரசிகர்கள் விரும்ப வாய்ப்பு உள்ளது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி ஜனவரி 11 (சனிக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு துவங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சக அணியான எம்ஐ கேப் டவுன் அணியுடன் மோத உள்ளது.