ஜோஹன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றுமா? அல்லது தென்னாப்பிரிக்கா தொடரை சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது பற்றி பார்க்கலாம். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை, இந்திய அணி வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று இருந்தது.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் மோதும் டி20 தொடர் என்பதால் இந்த தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவில் இருக்கும் நிலையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இது நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பதால் மூன்று போட்டிகளில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் அந்தப் போட்டியில் சதம் அடித்து இருந்தார்.
இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார். ஆனாலும், இந்தியா தோல்வி அடைந்தது. அடுத்து மூன்றாவது போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 2 - 1 என்ற கணத்தில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வென்றால் இந்த தொடரை 3 - 1 என கைப்பற்ற முடியும். மாறாக தென்னாப்பிரிக்கா அணி கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் 2 - 2 என இந்த தொடர் சமன் ஆகும். எனவே, இந்திய அணி நான்காவது போட்டியில் வெற்றி பெற கடும் முயற்சி எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.