டர்பன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டு இந்திய வீரர்களிடம் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சிறுவர்கள் போல வரிசையாக விக்கெட்களை கோட்டை விட்டதாக கூறி விமர்சனம் செய்து இருக்கிறார் முன்னால் தென்னாப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் இடம் வரிசையாக விக்கெட்களை இழந்தது.

வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இருவரும் மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்தனர். வருண் சக்கரவர்த்தி முக்கிய விக்கெட்களான ஹென்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லரை ஒரே ஓவரில் வீழ்த்தி இருந்தார்.
12 வது ஓவரில் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் ஆட்டமிழந்த போது தென்னாப்பிரிக்கா 87 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போதே தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கை முடிவுக்கு வந்தது. அதன் பின் 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த தென்னாப்பிரிக்கா 141 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
இது பற்றி பேசிய மார்க் பவுச்சர், "வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் இணைந்து பந்து வீசியதை பார்க்கும்போது அபாரமாக இருந்தது. இருவரும் பந்துவீச்சில் அருமையான கூட்டணியை அமைத்து இருந்தனர். கிளாசன் இன்று ஆட்டத்தின் போக்கை உணர்ந்து ஆடவில்லை. அவர் நல்ல ஃபார்மில் இல்லை. அவர்கள் ஏதோ ஒன்று நடக்கும் என காத்து இருந்தது போல இருந்தது. ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி இடையே ஒன்பது பந்துகளை வீசி 3 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து அழுத்தத்தை அதிகரித்து இருந்தனர். அதை பார்க்கும் போது வளர்ந்த ஆண்களுக்கு எதிராக சிறுவர்கள் ஆடியது போல இருந்தது" என்றார்.