SA vs IND: டக் அவுட் ஆவதில் புதிய வரலாறு படைத்த இந்திய வீரர்.. கோலி, ரோஹித் சாதனை முறியடிப்பு!
கேபெர்ஹா: இந்திய அணி இதற்கு முன் ஆடிய கடைசி இரண்டு டி20 போட்டிகளில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மூன்று பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.
2024 ஆம் ஆண்டில் இது அவரது நான்காவது டக் அவுட் ஆகும். இதன் மூலம் மோசமான சாதனையை செய்து இருக்கிறார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து இருந்தார். அவர் 107 ரன்கள் அடித்து இருந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதற்கு முன் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து இருந்தார். அதனால் மூன்றாவதாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் சதம் அடித்து ஹாட்ரிக் சாதனை செய்வாரா? என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அவர் மூன்று பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.
இதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் இதுவரை நான்கு முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இந்த நிகழ்வை செய்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையையும் அவர் பதிவு செய்து இருக்கிறார். இதற்கு முன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்கள்.
ரோஹித் சர்மா 2018 ஆம் ஆண்டிலும், விராட் கோலி 2024 ஆம் ஆண்டிலும் இந்த மோசமான சாதனையை செய்து இருந்தனர். சஞ்சு சாம்சன் அவர்களின் மோசமான சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். எந்த இந்திய பேட்ஸ்மேனும் ஒரே ஆண்டில் நான்கு முறை டக் அவுட் ஆனதில்லை.
மேலும், சர்வதேச அளவில் எந்த வீரரும் ஒரே ஆண்டில் இரண்டு சதம் அடித்து மற்றும் நான்கு டக் அவுட் ஆனதில்லை. அந்த விசித்திரமான சாதனையையும் செய்து இருக்கிறார் சஞ்சு சாம்சன். இரண்டாவது டி20 போட்டியில் சாம்சன் டக் அவுட் ஆன பின் இந்திய அணியின் முக்கிய விக்கெட்கள் வரிசையாக சரிந்தன.
45 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமாக இருந்தது இந்திய அணி. அதன் பின் அக்சர் பட்டேல் 27 ரன்கள், ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் எடுத்தனர். அதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி 125 ரன்கள் என்ற இலக்கை 19 ஓவர்களில் எட்டி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


Click it and Unblock the Notifications