ஜோஹன்னஸ்பெர்க்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3 - 1 என தொடரை வென்றது. நான்காவது போட்டியின் முடிவில் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் நான்கு போட்டிகளில் 12 விக்கெட்கள் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திலக் வர்மா அந்த விருதை வென்றார்.
இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் திலக் வர்மா இரண்டு சதங்கள் அடித்து இருந்தார். அதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், நான்கு போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என சில ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் திலக் வர்மா 33 மற்றும் 20 ரன்கள் எடுத்து இருந்தார். கடைசி இரண்டு போட்டிகளில் நாட் அவுட் ஆக 107 மற்றும் 120 ரன்கள் சேர்த்து இருந்தார். மொத்தம் 280 ரன்கள் சேர்த்து இருந்தார். அவர் இரண்டு போட்டிகளில் நாட் அவுட் ஆக இருந்ததால் அவரது சராசரி 140 ஆக இருந்தது.
மறுபுறம் சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் போட்டியில் 3 விக்கெட்களும், இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்களும் வீழ்த்தினார். கடைசி இரண்டு போட்டிகளில் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆக மொத்தம் 12 விக்கெட்கள் வீழ்த்தினார். ஒரே தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார்.
மேலும், இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணிக்காக இரண்டாவது சிறந்த டி20 பந்துவீச்சை பதிவு செய்து இருந்தார். ஆனால், அவர் 5 விக்கெட் வீழ்த்தியும் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்ததே அவருக்கு தொடர் நாயகன் விருது கிடைக்காமல் போக காரணம் என கூறப்படுகிறது.
திலக் வர்மா சதம் அடித்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும், முதல் இரண்டு போடிட்களிலும் அவர் ஓரளவு ரன் சேர்த்தார். எனவே அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. சிலர் இந்த தொடரில் இரண்டு சதம் அடித்த சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கி இருக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
ஆனால், சஞ்சு சாம்சன் இந்த தொடரில் இரண்டு சதம் அடித்த அதே வேளையில் இரண்டு டக் அவுட்டும் ஆகி இருக்கிறார். எனவே, அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை. இந்த தொடரின் நான்கு போட்டிகளில் ஆடிய திலக் வர்மா 280 ரன்களும், சஞ்சு சாம்சன் 216 ரன்களும் எடுத்து இருந்தனர்.
இந்த தொடரில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை விட இந்திய பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். ஒரு தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் கூட 5 விக்கெட்கள் வீழ்த்தவில்லை. ஜெரால்ட் கோட்ஸி அதிகபட்சமாக 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இந்திய பந்துவீச்சாளர்களான வருண் 12 விக்கெட்கள், அர்ஷ்தீப் சிங் 8 விக்கெட்கள், ரவி பிஷ்னோய் 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர்.