90 ஆண்டுகளில் இல்லாத சோகம்..!! நியூசி.யிடம் பொட்டி பாம்பாக அடங்கிய தென்னாப்பிரிக்கா.. ஹென்ரி அபாரம்
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் களமிறங்கினர். இந்தியாவை வீழ்த்திய மெதப்புடன் தென்னாப்பிரிக்கா இந்த தொடரில் பங்கேற்றது.

அபார பந்துவீச்சு
ஆனால், நியூசிலாந்து வீரர்களின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர். தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கார் 1 ரன்னிலும், செரல் இர்வ் 10 ரன்களிலும், நட்சத்திர வீரர் மார்க்ரம் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஹென்ரி, ஜெமிசன் பந்துவீச்சில் வெளியேறினர்.

தடுமாற்றம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெண்டர் டுசைன் 8 ரன்களிலும், பெவுமா 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்க அணி 52 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் ஹென்ரி வீசிய ஆட்டத்தின் 46வது ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

7 விக்கெட்டுகள்
இதனையடுத்து ஹென்ரிக்கு ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு கைக் கூடவில்லை. இதனால் கடைசி விக்கெட்டை வெக்னர் வீழ்த்தினார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 95 ரன்களில் சுருண்டது. கடந்த 21 டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். நியூசிலாந்து வீரர் மாட் ஹென்ரி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

முதல் நாள்
தென்னாப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சன் இந்த தொடரில் இடம்பெறவில்லை. இதனால் தென்னாப்பிரிக்க அணியின் மானம் கப்பலில் ஏறியது. இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிஎஸ்கே வீரர் கான்வே 36 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications