டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்க அணி தற்போது பதிலடி கொடுத்துள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இரு அணிகளும் பல புதிய வீரர்களுடன் களம் கண்டன. 11 நாட்களுக்கு முன்பு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணியில் இருந்து கேஷவ் மகராஜ் மட்டுமே இப்போட்டியில் விளையாடினார். தென்னாப்பிரிக்கா நான்கு அறிமுக வீரர்களைக் களம் கண்டது.
நல்ல பவுன்ஸ் கொண்ட ஆடுகளத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த நியூசிலாந்து தடுமாறியது. தென்னாப்பிரிக்காவின் புதிய வேகப்பந்துவீச்சாளர்களான ஜெரால்ட் கோட்ஸி, ஒட்னீல் பார்ட்மன், அறிமுக வீரர் என்கோபானி மோகோயெனா ஆகியோர் அபாரமாகச் செயல்பட்டனர்.

நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஜிம்மி நீஷமின் 26 ரன்கள் தான். நீஷமுக்கும் கோல் மெக்கான்சிக்கும் இடையிலான அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் . நியூசிலாந்து அணி 15 ஓவர்களுக்குள்ளாகவே 91 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து நிர்ணயித்த சுமாரான இலக்கை எட்ட தென்னாப்பிரிக்கா கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். மிட்செல் சான்ட்னர் தனது நான்கு ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். அறிமுக வீரரான கோனர் எஸ்டர்ஹைசன் 48 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார்.
தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றாலும், அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கவிருந்த ஜோர்டன் ஹெர்மன், ஃபீல்டிங்கின் போது தொடை எலும்புப் பகுதியில் தசைப்பிடிப்புக்கு ஆளானதால் பேட்டிங் செய்ய முடியவில்லை.
ரிசர்வ் பேட்ஸ்மேன்கள் இல்லாததாலும், ஆட்டங்களுக்கு இடையே குறைவான இடைவெளி இருப்பதாலும், தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு வீரர்கள் பற்றாக்குறை ஏற்படலாம். நியூசிலாந்து அணியிலும் பெவோன் ஜேக்கப்ஸ் காயம் அடைந்தார். ஒரு ஃப்ரீ ஹிட் கேட்சை பிடிக்க ஓடியபோது, வலது முழங்காலில் காயம் அடைந்து களத்தை விட்டு வெளியேறினார்.
பவர்பிளேயின் முதல் ஆறு ஓவர்களில், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் பாதி பேட்ஸ்மேன்களை வீழ்த்தினர். லேசான ஸ்விங் மற்றும் சவாலான லெந்த்களைப் பயன்படுத்திக் கோட்ஸி தனது முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார். டேவான் கான்வே, கடினமான லெந்த்தில் வந்த பந்தை தவறாக அடித்து ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார்.
அடுத்ததாக, கோட்ஸி பந்தில் டாம் லேத்தம் எல்பிடபிள்யூ ஆனார். இரண்டு பந்துகளிலேயே ஒட்னீல் பார்ட்மன் தன் திறமையை நிரூபித்தார். அவர் வீசிய ஃபுல் மற்றும் நேரான பந்தை டிம் ராபின்சன் மிட்-ஆனில் அடித்து கேட்ச் ஆக, அடுத்த பந்திலேயே நிக் கெல்லினை கிளீன் போல்ட் செய்தார்.
பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி, ஃபீல்டர்களும் சிறப்பாகப் பங்களித்தனர். பெவோன் ஜேக்கப்ஸ், பார்ட்மனின் பந்தை கவர்பகுதிக்கு அடித்து ஒரு ரன்னுக்கு ஓட முற்பட்டபோது, ரூபின் ஹெர்மன் நேராக ஸ்டம்பை அடித்து ரன் அவுட் செய்தார். பவர்பிளேயின் முடிவில் நியூசிலாந்து 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அறிமுக வீரரான 19 வயது என்கோபானி மோகோயெனா, தனது அச்சுறுத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். தனது மூன்றாவது ஓவரில், வேகத்தைக் குறைத்து நீஷமுக்கு பந்துவீசினார். ஸ்லாக் ஸ்வீப் அடிக்க முயற்சிக்கும் போதே பந்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆக, மோகோயெனா தனது முதல் சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றினார். அதே ஓவரில், வேகத்தையும் பவுன்ஸையும் பயன்படுத்தி சாக் ஃபௌல்கெஸையும் வீழ்த்தினார். டி20 உலககோப்பை இறுதிப் போட்டி வரை வந்த நியூசிலாந்து அணி அடுத்த ஒரு வாரத்திற்குள் 91 ரன்களில் சுருண்டது குறிப்பிடத்தக்கது.