கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார். அவருடன் ஆடிய மற்றொரு தொடக்க வீரர் டிம் செய்ஃபெர்ட்-டும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.
இந்தப் போட்டியில் 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இந்த ஆட்டத்தில் வெறும் 38 பந்துகளில் சதம் கடந்து, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் 19 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இது டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் ஒருவரின் அதிவேக அரைசதமாகும். நடப்பு தொடரிலேயே கனடா அணிக்கு எதிராக க்ளென் பிலிப்ஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அதை ஃபின் ஆலன் தற்போது முறியடித்துள்ளார்.

ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தது. டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் இது இரண்டாவது பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும். 2022 அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி 170 ரன்கள் சேர்த்ததே முதலிடத்தில் உள்ளது.
மேலும், இந்த 2026 உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்த ஜோடி இணைந்து 463 ரன்களை குவித்துள்ளது. இது ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு பார்ட்னர்ஷிப் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் 2024 தொடரில் ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஜோடி 446 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. அத்துடன், ஒரே உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகளின் பட்டியலிலும் ஆலன் மற்றும் செய்ஃபெர்ட் ஜோடி இணைந்துள்ளது.

நியூசிலாந்து அணி பவர்பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்களை குவித்தது. டி20 உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் ஒரு அணி பவர்பிளேயில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2016 அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 67 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
அதேபோல, உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணியின் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோரும் இதுவே ஆகும். நடப்பு தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்திருந்ததை அந்த அணி தற்போது முறியடித்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மார்கோ ஜான்சன் 30 பந்துகளில் 55 ரன்களும், டெவால்ட் பிரெவிஸ் 34 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 29 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் மாட் ஹென்றி, கோல் மெக்கன்சி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஜோடி அபாரமான தொடக்கத்தை கொடுத்தது. டிம் செய்ஃபெர்ட் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ககிசோ ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடிய ஃபின் ஆலன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 13 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 12.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. இதை அடுத்து நியூசிலாந்து அணி 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.