இதான்யா டைமிங்.. 2 ஆண்டு தூக்கத்துக்கு பின் ஃபார்முக்கு வந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்
கேப் டவுன்: சுமார் இரண்டு ஆண்டுகளாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம், தற்போது ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக படுமோசமாக ஆடி பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கும் காரணமாக இருந்தார். ஆனால், இந்திய அணியின் மூத்த வீரர்கள் சொதப்பி வரும் அதே சமயத்தில் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா படுமோசமாக பேட்டிங் ஆடி, ஃபார்ம் இழந்து விமர்சனங்களை சந்தித்து வரும் அதே சமயம், பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் தான் ஆடிய கடைசி நான்கு போட்டிகளில் ஐந்து அரை சதங்களை அடித்து அசத்தி இருக்கிறார். இதை அடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மிக மோசமான ஃபார்மில் இருந்தார். அதே காலகட்டத்தில் பாகிஸ்தான் அணியும் பல முக்கிய போட்டிகளிலும், பெரிய தொடர்களிலும் தோல்விகளை சந்தித்து வந்தது. இடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டு இருந்தார்.
அதன் பின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். அப்போது முதல் படிப்படியாக ரன் குவிக்க துவங்கினார் பாபர். கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் இரண்டு அரை சதங்களை அடித்தார்.. அந்த தொடர் முடிந்தவுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அரை சதம் அடித்தார்.
அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அரை சதங்களை அடித்து அசத்தி இருக்கிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 615 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கல்டன் 259 ரன்கள் குவித்து இருந்தார்.
அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதில் பாபர் அசாம் மட்டுமே 58 ரன்களை சேர்த்து இருந்தார். அடுத்து பாகிஸ்தான் அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது. அப்போது பாபர் அசாம் மீண்டும் அரை சதம் அடித்து, 81 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
இதை அடுத்து பாபர் அசாம் ஃபார்முக்கு வந்து விட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களில் அது பற்றி அவரை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், விராட் கோலி ஃபார்ம் அவுட் ஆனதை சுட்டிக் காட்டி, அவருடன் பாபர் அசாமை ஒப்பிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications