ஜோஹன்னஸ்பெர்க்: இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி அணிகள் கூட செய்ய முடியாத ஒரு வரலாற்று சாதனையை பாகிஸ்தான் அணி செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 - 0 என கைப்பற்றி இருக்கிறது.
இதன் மூலம், தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்க அணியை மூன்று போட்டிகள் அல்லது அதற்கும் மேற்கொண்ட ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்த முதல் அணி என்ற மாபெரும் வரலாற்று சாதனையை பாகிஸ்தான் அணி செய்துள்ளது.

இதற்கு முன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பலமுறை வென்று இருந்தாலும், எப்போதும் ஒயிட்வாஷ் வெற்றியை பெற்றதில்லை. அதாவது தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியதில்லை.
அந்த சாதனையை செய்த முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் அணி பெற்று இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. அதன் முடிவாக தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என வென்றது. அடுத்து தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 - 0 என வென்று இருக்கிறது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்ததை சுட்டிக்காட்டி உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அந்த தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீண்டு ஒருநாள் தொடர்களை வரிசையாக வென்று இருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.