SA vs PAK: 123 வருட பிரம்மாண்ட சாதனையை உடைத்த பாகிஸ்தான்.. தென்னாப்பிரிக்கா மண்ணில் சாதனை ஸ்கோர்
கேப் டவுன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 123 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்து அசத்தி உள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆனாலும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய ஆட்டம் சிறப்பானதாக இருந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஃபாலோ - ஆன் பெற்று இருந்தது. அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் 478 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகளை முறியடித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 615 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் ரியான் ரிக்கல்டன் இரட்டை சதம் அடித்து 259 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்கள் சேர்த்தார். விக்கெட் கீப்பர் கைல் வெரின் 100 ரன்கள் சேர்த்தார். தென்னாப்பிரிக்க அணி 615 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்கள் ஆல் அவுட் ஆனது.
இதை அடுத்து பாகிஸ்தான் அணிக்கு தென்னாப்பிரிக்கா அணி ஃபாலோ ஆன் கொடுத்தது. பாகிஸ்தான் அணி விரைவில் ஆட்டம் இழக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் ஷான் மசூத் 145 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.
இதை அடுத்து பாகிஸ்தான் அணி 478 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 123 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா மண்ணில் ஃபாலோ ஆன் பெற்ற பின் அதிக ஸ்கோர் குவித்த அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்று இருக்கிறது. இதற்கு முன் 1902 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணி ஃபாலோ ஆன் பெற்ற பின்னர் 7 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் சேர்த்து இருந்தது.
அந்த சாதனையை தற்போது பாகிஸ்தான் அணி முறியடித்து உள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகள் ஆடத் துவங்கி 136 ஆண்டுகள் ஆகிறது. இதில் முதல்முறையாக எதிரணி ஒன்று ஃபாலோ ஆன் பெற்ற பிறகு 400 ரன்களுக்கும் மேல் சேர்த்து சாதனை படைத்து இருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் அதிக ஃபாலோ ஆன் ஸ்கோரை அடித்த சாதனையை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1999 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா செய்தது. அப்போது 572 ரன்கள் சேர்த்து இருந்தது தென்னாப்பிரிக்கா. இந்த சாதனைகள் ஒரு புறம் இருக்க இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 58 ரன்கள் என்ற சிறிய இலக்கை மட்டுமே பாகிஸ்தான் அணியால் நிர்ணயிக்க முடிந்தது.
தென்னாப்பிரிக்கா அதை எளிதாக எட்டியது. 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் சிறப்பான இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.


Click it and Unblock the Notifications