டர்பன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த வெறும் 8 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் கிளாசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஹென்ரிக்ஸ் - வான் டெர் டூசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஷாகீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே வான் டெர் டூசன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

தொடர்ந்து வந்த ப்ரீட்ஸ்கே பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மத் வீசிய 2வது ஓவரில் 8 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஹென்ரிக்ஸ் 8 ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் சீனியர் வீரர்களான மில்லர் - கிளாசன் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது.
4வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கிளாசன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும், டேவிட் மில்லரின் அதிரடியை பாகிஸ்தான் பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 10வது ஓவரை வீசிய அப்ரார் அஹ்மத் பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து 28 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியும் பறந்து கொண்டே இருக்க, சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 40 பந்துகளில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 82 ரன்கள்ன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த லிண்டே 24 பந்துகளில் 48 ரன்கள் விளாச, தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது. ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்பின் சவாலான இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் - பாபர் அசாம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 18 வயதேயான மபாகா பந்தில் பாபர் அசாம் டக் அவுட்டாகி வெளியேறம், பின்னர் வந்த அயூப் அதிரடியாக ரன்களை குவித்தார். அவரின் அதிரடியான பவுண்டரிகள் காரணமாக பாகிஸ்தான் அணி 6 ஓவர்களில் 55 ரன்களை குவித்தது. ஆனால் சிமிலானே பவுலிங்கில் அயூப் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எந்த அளவிற்கு நிதானம் என்றால், கேப்டன் ரிஸ்வான் 50 பந்துகளில் அரைசதத்தை எட்டி நிதானமாக ரன்களை சேர்த்தார். இதனால் கடைசி 4 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 60 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது மபாகா வீசிய 17வது ஓவரில் 24 ரன்களை ரிஸ்வான் - ஷாகீன் அப்ரிடி இணைந்து விளாசினார்.
இதனால் பாகிஸ்தான் கம்பேக் கொடுத்ததாக பார்க்கப்பட்ட போது, லிண்டே வீசிய 18வது ஓவரில் 3 விக்கெட்டுகளை கொத்தாக விட்டது. இதனால் கடைசி 2 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. பார்ட்மேன் வீசிய 19வது ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவையாக இருந்த போது, 2வது பந்திலேயே ரிஸ்வான் 62 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் 8 ரன்களை மட்டும் சேர்த்ததால், தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. டெஸ்ட் தொடருக்கான முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இளம் வீரர்கள் கொண்ட தென்னாப்பிரிக்கா அணியுடம் பாகிஸ்தான் தோல்வியடைந்திருப்பது அந்த அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.