நீதான்யா கேப்டன்.. 3வது டெஸ்ட் சதம்.. தென்னாப்பிரிக்காவை ஒற்றை ஆளாக காத்த பவுமா.. பாவம் இலங்கை!
டர்பன்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா தனது 3வது டெஸ்ட் சதத்தை விளாசி அசத்தியுள்ளார். இதனால் இலங்கை அணி வெற்றிபெற தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் 515 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, பின்னர் பேட்டிங் ஆடிய இலங்கை அணி வெறும் 42 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணியின் மார்கோ யான்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ரன்களும், கேப்டன் பவுமா 24 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் விக்கெட் கொடுக்காமல் பேட்டிங் செய்ய, தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
சிறப்பாக ஆடிய ஸ்டப்ஸ் சதமடிக்க, இன்னொரு பக்கம் கேப்டன் பவுமா தனது 3வது டெஸ்ட் சதத்தை விளாசினார். பின்னர் ஸ்டப்ஸ் 122 ரன்களிலும், பவுமா 113 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா அணி 100.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 366 ரன்களை குவித்திருந்தது. முதல் இன்னிங்ஸிலேயே 149 ரன்கள் முன்னிலை எடுத்திருந்ததால், இலங்கை அணி வெற்றி பெற 515 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் ஒற்றை ஆளாக பவுமா தென்னாப்பிரிக்கா அணியை காப்பாற்றியுள்ளார். முதல் இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் யாரும் ரன்கள் சேர்க்காத நிலையில், தனியாளாக நின்று 71 ரன்களை விளாசி தள்ளினார். 2வது இன்னிங்ஸிலும் 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்த நிலையில், பவுமா ஒரு பக்கம் நங்கூரமிட்டு விளையாடி சதத்தை விளாசி இருக்கிறார்.
அண்மை காலங்களில் அதிகளவில் உருவக்கேலிக்கு ஆளான டெம்பா பவுமா, டர்பனின் தென்னாப்பிரிக்கா அணியால் வெற்றி பெற முடியவில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதி தயாராகியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெறும் பட்சத்தில், அந்த அணியால் எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.


Click it and Unblock the Notifications